ஆயிரக்கணக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதிலைத் தேடிப் பல வருடங்களாக குடும்ப உறவுகளான நாம் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
தமிழர் தாயகத்திற்கு அப்பால், சர்வதேச மட்டத்திலும் நீதிக்காகப் போராடியிருக்கிறோம். ஜெனீவா வரை எமது குரலையும், கோரிக்கையையும் சாட்சியங்களையும் முன்வைத்திருக்கிறோம்.
ஆனாலும், சர்வதேச சமூகம், குறிப்பாக ஐ.நா.வின் மனித உரிமைச் சபையும் அங்கே தொடர்ந்துவந்த மனித உரிமை உயர் ஸ்தானிகர்களின் செயலகமும், சர்வதேச நீதியை வழங்காமல் இழுத்தடித்தே வந்திருக்கின்றன. இதன் சூட்சுமமாக இன அழிப்பு மறுப்பும் சர்வதேச சக்திகளின் பூகோள அரசியலும் இருந்துவருகின்றன.
இலங்கை அரசின் இன அழிப்புக் காலத்துத் தலைவர்கள் மீதும் அதன் இராணுவத் தளபதிகள்; மீதும் சர்வதேசக் குற்றவியல் விசாரணையையோ அல்லது இலங்கை மீது இன அழிப்புக்கான அரச பொறுப்புக் குறித்துக் கொண்;டு வரக்கூடிய ஒரு சர்வதேச விசாரணையையோ நோக்கி நீதிவழங்கல் நகர்த்தப்படவில்லை. மாறாகத், தொடர்ந்தும் இன அழிப்பு வேலைத்திட்டத்தைக் கைக்கொள்ளும் போலியான உள்ளக நீதிப் பிரளயத்தையே ஈழத்தமிழர்களுக் கான தீர்வாகக் காட்ட முயற்சிக்கும் வேலைத்திட்டமே ஐ.நா.வின் மனித உரிமைப் பொறிமுறையூடாக இதுவரை நகர்ந்திருக்கிறது.
இறுதியில் இலங்கையும் அமெரிக்காவும் இணைந்து கொண்டுவந்த, எந்தவித நீதிக்கான அடிப்படையும் இல்லாத ஒரு தீர்மானத்தின் ஊடாக, இன அழிப்புக் குற்றத்திற்குரிய இலங்கை அரசிடமே நீதிவழங்கலை உறுதிப்படுத்துமாறு வேண்டி நின்ற கேவல நிலையையும் நாம் பார்த்துவிட்டோம்.
இதன் தொடர்ச்சியாகவே காணாமற் போனோருக்கான அலுவலகம் என்ற கண்துடைப்பு நடவடிக்கை மூலம் எமது குரல்களை ஒரு சில நிவாரணங்களை வழங்கியும் போலியான திரிசங்குப் பத்திரங்களை வழங்கியும் அடக்கி விடலாம் என்று சில சர்வதேச சக்திகளும் இலங்கை அரசோடு சேர்ந்து கற்பனை பண்ணுகின்ற இழிநிலையும் தோன்றியுள்ளது.
இந்த நிலையில், வவுனியாவில் தீவிரமாகப் போராடி வரும் எங்கள் பெண்களிடம் அமெரிக்கக் கொடியையும், ஐரோப்பிய யூனியனின் கொடியையும் காவிக்கொண்டு போராடுமாடு புலம்பெயர் சூழலில் இருந்து சிலர் அறிவுரை செய்த கேவலமும் நடந்திருப்பது கவலைக்குரியது.
இதைப் போலவே, தென்னிலங்கையில் இருந்து எமது அவலத்தில் நிதியுதவி தேடும் நிறுவனங்கள் தமது வயிற்றுப் பிழைப்புக்காக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தைத் திசை திருப்பும் சந்தர்ப்பவாதமும் நடை பெறுகிறது.
அதேவேளை இலங்கை அரசின் பொறிமுறைகளை விமர்சிப்பது போலவும் பிழைபிடிப்பது போலவும் பாவலா காட்டி எம்மை உள்ளகப் பொறிமுறைக்குள் விழச் செய்யும் சட்ட வல்லுநர்களின் அறிவுரைகளுக்கும் குறைச்சல் இல்லை. 2009 இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் எமது கண்களுக்கு முன்னால் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதிலை இலங்கை அரசும், இலங்கை அரசுக்குத் துணைபோன சர்வதேச சக்திகளும் இதுவரை வழங்கத் தயாராக இல்லை. வலியைச் சுமக்கும் நாமே எமது போராட்டத்தைத் தீர்மானிக்கவேண்டும்.
நீதிப் பொறிமுறை ஒன்றில் பாதிக்கப்பட்ட தரப்பான எம்மை வெறும் பாதிக்கப்பட்ட தரப்பாக மட்டுமே சர்வதேச சமூகம் கையாளுகிறது. குற்றங்களைப் பற்றிக் குறிப்பிடும்போதும், தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போதும் மட்டும் இனப்பிரச்சனையின் இரண்டு தரப்புகளும் சமமாகக் குற்றமிழைத்தார்கள் என்று கற்பிதம் செய்ய விழைகின்ற இந்தச் சர்வதேசசமூக ஜாம்பவான்கள், நியாயம் வழங்கலுக்கான பொறுப்பை மட்டும் ஒரு தரப்பிடம் கையளித்துவிட்டு, எம்மை ஒருதலைப்பட்சமாக கண்காணித்து வேண்டுமென்றால் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாக்குப் போக்குச் சொல்லிவருகிறார்கள். இதுவும் காலத்தைக் கடத்தும் உத்தியே!
சர்வதேச சமூகம் என்ற போர்வையில், சில நாடுகளின் ராஜதந்திரிகள் கொழும்பை மையப்படுத்திச் சிந்திப்பதும், இலங்கையின் பூகோள அரசியலைத் தமக்குச் சார்பாக வைத்திருப்பதற்காக எமது தேசியச் சிக்கலைப் பலிக் கடாவாக்குவதும் தொடர்ந்து நடைபெறுவதை நாம் ஆழமாகவே அவதானித்து வருகிறோம்.
காணமற்போன எமது உறவுகளைத் தேடும் எமது போராட்டத்தை எடுப்பார் கைப்பிள்ளைப் போராட்டமாக மாற்றி, தமது நிதியூட்டத்திற்கும், சர்வதேச இழுத்தடிப்புக்கும், இன அழிப்பு வேலைத்திட்டத்தை மூடிமறைக்கும் இலங்கை அரசின் கண்துடைப்பு நாடகங்களுக்குள்ளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலியாக்கும் செயற் பாடுகளில் இருந்து விடுபட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளான நாம் சுயாதீனமாக இயங்கவேண்டியது தற்போது மிகவும் அவசியமாகிறது.
எனவே, எமது போராட்டத்தை நாமே வடிவமைப்போம். இன்று தொடக்கம் எமது கோரிக்கைகளை நாமே செதுக்குவோம். எமது கோரிக்கைகளை நாமே தீர்மானிப்போம். எமது பதாகைகளை நாமே எழுதுவோம்! உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளையும் உலகளாவிய முற்போக்குச் சக்திகளையும் துணையாகக் கொண்டு, எந்தச் சக்திகளினதும் சார்புநிலைக்கும் ஆட்படாமல், எமது போராட்டத்தை முன்னெடுப்போம். அவ்வாறு முன்னெடுக்கப்படும் போராட்டம் மட்டுமே சர்வதேச சமூகத்தில் உண்மையான சில சக்திகளின் கண்களைத் திறக்கும். அப்போது தான உண்மைக்கான நீதி உருவாக்கம் பெறும். இன்று லத்தீன் அமெரிக்காவில் வீச்சம் பெற ஆரம்பித்துள்ள போக்கை இதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். இந்தத் தருணத்தில், எமது நீதிகோரிய பயணம் வீறு கொண்டு பயணிக்கும் என்று காணமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளான இன்றைய நாளில் நாம் அனைவரும் உறுதியெடுத்துக்கொள்வோம்.
இவ்வண்ணம்,
அனந்தி சசிதரன்,
மக்கள் பிரதிநிதி