ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தரப்படும் எனவும் பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத் துறை தரப்பில் அளித்த வாக்குறுதியையடுத்து, வேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து கடந்த 18ம் திகதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால், சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், முருகனின் உறவினர் தேன்மொழி, முருகனின் உயிரைக் காப்பாற்ற சிறைத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததனையடுத்து முருகனின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் முருகனிடம் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.’ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் திரும்பத் தரப்படும் எனவும் மகள் திருமணத்தில் பங்கேற்க பரோல் கோரிய மனு பரிசீலனையில் உள்ளதனால் இதன் மீது அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க்கபடும் எனவும் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து, உண்ணாவிரதத்தை நேற்று மாலை முருகன் கைவிட்டார். எனினும், முருகனின் மனைவி நளினி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.