Home இலங்கை பத்தோடு பதிணொன்றாக மாறிவரும் இனப்பிரச்சினை – -அ.நிக்ஸன்-

பத்தோடு பதிணொன்றாக மாறிவரும் இனப்பிரச்சினை – -அ.நிக்ஸன்-

by admin


தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மாற்று அரசியல் அணி;யை உருவாக்க இடமளிக்கக்கூடாது என்பதில் ஐக்கியதேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே புள்ளியில் நிற்கின்றன.

-அ.நிக்ஸன்-
புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு உண்டு என அடித்துச் சொன்ன தமிழரசுக்கட்சி தற்போது 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூறப்போது என்ன என்ற கேள்வி எழுகின்றது. அதுமாத்திரமல்ல புதிய அரசியல் யாப்பை அப்படியே கைவிடக்கூடிய ஏற்பாடுகளும் இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 ஆண்டுகால இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக சேர்த்து நோக்குகின்ற அரசியல் அணுகுமுறையை நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படையாகவே கடைப்பிடிக்கின்றது என இந்த பத்தி எழுத்தில் பல தடவை கூறப்பட்டுள்ளது.

உள்ளக விவகாரம்
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறிவந்தார்; நல்லாட்சி அரசாங்க அதனை புதிய அரசியல் அணுகுமுறையாகவும் குறிப்பாக சர்வதேச நாடுகளும் இனப்பிரச்சினையை உள்நாட்டு விவகாரமாக கருதி தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்ற தொணியிலும் செயற்படுகின்றது.

வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற திலக்மாரப்பன கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றார். இனப்பிரச்சினை தற்போது இல்லை என்றும் ரணில் மைத்திரி நல்லாட்சியில் தமிழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்து செயற்படுவதாகவும் கூறியதாக வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். இவ்வாறு இனப்பிரச்சினையை பத்தோடு பதிணொன்றாக நோக்குவதற்கும் இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன.

சாதகமான நிலைமை
ஒன்று- தமிழரசுக் கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள் 2009 மே மாதத்திற்குப் பின்னர் பூனையில்லா வீட்டில் எலிக்கு கொண்டாட்டம் என்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை. இரண்டாவது அமெரிக்கா, இந்திய போன்ற நாடுகள் மைத்திரி ரணில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக தக்கவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றமை. இந்த இரண்டு காரணங்களும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு மத்திரமல்ல தென்பகுதி அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் சாதகமாக அமைந்துவிட்டன.

தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள 20 ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது. இதற்கு ஜே.வி.பி போன்ற சிங்கள அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு வெளியிடுகின்றது. ஆனால் அது அரசியல் ரீதியான எதிர்ப்பு மாத்திரமே ஏனெனில் அதிகாரப்பரவலாக்கம் அல்லது அதிகாரப்பகிர்வு என்பது வடக்கு கிழக்கு பகுதிக்கு தேவையில்லை என்ற உணர்வுதான் ஜே.வி.பியிடம் மேலோங்கியுள்ளது.

நல்லிணக்கத்துக்கான சூழல்?
குறிப்பாக புதிய அரசியல் யாப்பில் எதுவும் இல்லையென தமிழ்த்தரப்பு குற்றம் சுமத்தி வரும் நிலையில் அந்த யாப்புக் கூட நாட்டை பிளவுபடுத்தும் என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஜாநாயக்கா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆகவே 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கான ஜே.வி.பியின் எதிர்ப்பு என்பது வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டதுதான் என்பது வெளிப்படை எனலாம்.

அதேவேளை மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் உதவியை சம்பந்தன் நாடியுள்ளார். குறிப்பாக மஹிந்த ராஜபக்சவுடன் மீண்டும் உறவை புதுப்பித்து இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு கோரியுள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. எனவே எந்தவகையான இராஜதந்திர செயற்பாடு என்பது குறித்து சம்பந்தன் மக்களுக்கு கூறக் கடமைப்பட்டுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுடன் பேசினாரா அல்லது தமிழ் மக்களை கூடுதலாக பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் பேசினாரா என்பது கூட யாருக்கும் தெரியாத நிலை.

அபிவிருத்தி மாத்திரமே
இனப்பிரச்சினை விவகாரம் அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கை மக்களின் பொருளாதார பிரச்சினையாகவும் அபிவிருத்திகளை செய்தால் போதும் என்ற நிலையும் உறுதிப்படுத்தக்கூடிய சூழல் காணப்படும் நிலையில் சம்பந்தன் மஹிந்த சந்திப்பு எந்த அடிப்படையில் அமைந்தது என்ற கேள்வியை கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் கேள்வி முன்வைத்துள்ளார். இந்த மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் அரசாங்கம் வழங்கவுள்ள அறிக்கையில் இனப்பிரச்சினை விவகாரம் உள்ளக பிரச்சினை என்ற அடிப்படையில் அமையும் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால் நடைமுறைச்சாத்தியமானதையே பேச வேண்டும் என மாவை சேனாதிராஜா கனடாவில் புலம்பெயர் மக்களிடம் கூறியுள்ளார். எனவே நடைமுறைச்சாத்தியம் என்பது அரசியல் தீர்வு இல்லாத அபிவிருத்திகளை மையமாகக் கொண்டதா என்பதை மாவை சேனாதிராஜா கூறுகின்றாரா? அபிவிருத்திதான் தற்போதைய பிரச்சினை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதா? ஏன்பது இங்கு கேள்வியாகும். ஆகவே இவ்வாறான கேள்விகளுக்கு தமிழரசுக் கட்சி மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சிவசக்தி ஆனந்தனின் கேள்வி
தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்தாக அமையாது என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இனிவரும் காலங்களில் சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என கேட்டுள்ளார். மஹிந்தவுடனான சந்திப்பின் பின்னர் நல்லாட்சியுடனான உறவு மற்றும் அரசியல் தீர்வு பற்றிய விடயங்களில் சம்பந்தன் உண்மையான நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை சில சிவில் அமைப்புகள் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கட்சி அரசியல் செயற்பாடுகளைத் தாண்டி வடக்கு கிழக்கு பிரச்சினைக்குரிய தீர்வை மக்கள் ஒன்று சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்ற கோசங்களை முன்வைத்து வருகின்றன. வவுனியா மன்னார் போன்ற இடங்களில் இடம்பெற்ற சில கூட்டங்களில் பங்குகொண்ட பொது நிலையினர் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். கேப்பாப்புலவு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் கட்சி அரசியலை விரும்பவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியிருந்தனர்.

அமைச்சர்களின் கருத்து நல்லாட்சியின் வருகையின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் இலங்கையர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ முற்பட்டுள்ளனர் என்ற விபரங்களை ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைப்பார் என அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜத சேனரட்னவும் அவ்வாறான கருத்தை செய்தியாளர் மாநாட்டில் பல தடவை கூறியிருக்கின்றார்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை மாற்றியமைக்கக்கூடிய அல்லது அந்தக் கட்சிகளை தவிர்த்து வேறு அரசியல் அணுகுமுறைகளை கையாளக்கூடிய ஏற்பாடுகளை செய்ய வேண்டிய காகலகட்டம் நெருங்கியுள்ளது என்பதையே அமைச்சர்களின் பேச்சுக்கள் கோடிட்டுக் காண்பிக்கின்றன. 20ஆவது திருத்தச்சட்டம் அவ்வாறான அரசியல் அணுகுமுறை ஒன்றுக்கு தமிழர்களை அழைத்துச் செல்கின்றது என மூத்த தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை

மாற்று அரசியல் ஏற்பாடாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை தமிழ் மக்கள் பேரவையினால் தமிழரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய அல்லது அல்லது அவர்களின் செயற்பாடுகளில் மாற்றங்களை செய்யக்கூடிய நடவடிக்கைகள் எதனையும் செய்ய முடியவில்லை. 20ஆவது திருத்தச் சட்டத்தின் உண்மை என்ன என்பதை அறிந்து அது குறித்த விழிப்புணர்களைக்கூட பேரவை இதுவரை செய்யவில்லை.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இருக்கின்ற அதிகாரங்களையும் பிடிங்கி எடுக்கின்ற வேலைத் திட்டங்களில்தான் மஹிந்த ராஜபக்ச அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் செய்தது செய்து வருகின்றது என்ற விடயங்களைக் கூட விலாவாரியாக சுட்டிக்காட்டவில்லை. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இரண்டு வகையான நிர்வாகம் உள்ளது. ஒன்று கொழும்பை மையப்படுத்திய சிங்கள அரசியல் கட்சிகளின் அரசாங்கம். இரண்டாவது இராணுவம்
குடிப்பரம்பலில் மாற்றம்
இந்த இரு நிர்வாகக்கட்டமைப்பும் ஒன்றை ஒன்று சமாந்தரமாக வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தேசியவாதம் பேச முடியாத செயற்பாடுகளை செய்கின்றன. உதாரணமாக அங்குள்ள அரச அலுவலகங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிப்பதும் இராணுவ யோசனையின் பிரகாரம் குடிப்பரம்பலில் மாற்றங்களை செய்வதும் முக்கியமானதாகும். இங்கு முஸ்லிம் மக்களைக் கூட குறைந்த பட்சம் ஒரே கட்டமைப்பாக குடியமரமுடியாத ஏற்பாடுகளையும் சிங்கள அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தில் செய்து வருகின்றனர் அதற்கு விரும்பியோ விரும்பாமலே முஸ்லிம் அரசியல்வாதிகளும் உடந்தையாகவுள்ளனர்.

ஆகவே இவ்வாறான சூழலில் எந்த அரசாங்கம் பதவியேற்றாலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இதுதான் நிலை என்ற அரசியல் ரீதியான விளக்கங்களை தமிழ் மக்கள் பேரவையும் செய்யவில்லை. அல்லது அதற்கான செயற்பாடுகளில் பற்றாக்குறை உண்டு எனலாம். தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மாற்று அணி;யை உருவாக்க இடமளிக்கக்கூடாது என்ற விடயத்தில் ஐக்கியதேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரே புள்ளியில் நிற்கின்றன. இந்த நிலையில் சம்ந்தன் மஹிந்த சந்திப்பு உணர்த்துவது என்ன? நடைமுறைக்கு சாத்தியமானதை சிந்திக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா கூறியதன் பொருள் என்ன?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More