Home இலங்கை ஊடகத்துறையில் ஒரு “குருநாதன்”! – வரதராஜா மரியாம்பிள்ளை:-

ஊடகத்துறையில் ஒரு “குருநாதன்”! – வரதராஜா மரியாம்பிள்ளை:-

by admin

இன உரிமைக்காய் குரல் கொடுத்த மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன்

ஈழத்தின் மூத்த  ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று (1) வெள்ளிக்கிழமை காலை காலமானார். திருகோணமலையைச் சேர்ந்த குருநாதன், திருமலையினில் இடம்பெற்ற இனஅழிப்பு கொலைகள்,நில பறிப்பு,பௌத்த மயமாக்கல் முதலியவற்றை அம்பலப்படுத்துவதில் முன் நின்றவர்.

யாழிலிருந்து வெளியான சஞ்சீவி வராந்தப் பத்திரிகையில் யுத்த காலத்தினில் பணியாற்றியிருந்தார்.அத்துடன் தமிழ்நெட் இணையத்தின் கிழக்கு செய்தியாளராக நெருக்கடியான காலப் பகுதியினில்  குருநாதன் இயங்கியிருந்தார்.
தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளராகவும் இவர் செயற்பட்டிருந்தார். இளம் ஊடகவியலாளர்களுடன் நல்லுறவினைப் பேணி அவர்களின் முன்னோடியாகவும் செயற்பட்டமையால் இளைய ஊடவியலாளர்கள் மத்தியில் நேசத்திற்குரியவரானார்.
மாமனிதர் தராகி சிவராமின் மதிப்பிற்குரிய ஊடகவியலாளராக இருந்த குருநாதன் வாழ்நாள் முழுவதும் ஊடகவியலாளனாக செயற்பட்டிருந்தார்.
அன்னாரது இறுதி நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 03 ம் திகதி காலை 10.00 மணிக்கு திருகோணமலை,148 பிரதான வீதியிலுள்ள அவரது சகோதரி வீட்டினில் நடைபெறுமென அவரது மகன் பிரதீபன் அறிவித்துள்ளார்.

ஊடகத்துறையில் ஒரு “குருநாதன்”! – வரதராஜா மரியாம்பிள்ளை

1985 ஜூன் மாத நடுப்பகுதி…!

“உதயன்” நாளிதழ் வேலைகள் தொடங்கிய நாட்கள்!

உதயனின் வருகைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களில் ஒருவராக அங்கும் இங்குமாய் அலுவலகத்தில் ஓடித் திரிந்தவர் அமரர் குருநாதன் அவர்கள்!

அவருக்குப் பதவி ” சிரேஷ்ட அலுவலகச் செய்தியாளர்” ; எனக்குப் பதவி, ” கனிஷ்ட அலுவலகச் செய்தியாளர்”.ஆகவே தொழிலில் உள்ளே நாம் அண்ணன் தம்பி.

தொழிலில் மட்டுமல்ல பழகியதிலும் அவர் நண்பர் என்ற நிலையைவிட ஓர் அண்ணனாகவே பழகினார்.

அமரர் எஸ் டி சிவநாயகத்தின் பட்டறையில் பணியாற்றிய மூத்த அனுபவங்களுடன் பணியாற்றக் கிடைத்த எனக்கு, அவற்றில் ஒன்றான குருநாதனுடன் இணைந்த பணி கிடைத்தமை பெரிய பேறாக அவருடன் பழகிய சில நாட்களில் உணர்ந்தேன்.

அவரை அங்கு சந்திக்க முதல் தினபதியின் செய்திகளில் பெயராக மட்டும் கண்டது மட்டுமே அவருடன் நான் கொண்ட தொடர்பு.

தினபதி, சிந்தாமணிக்கு ( திருமலை நிருபர் சி. குருநாதன்) ஆக அவர் இருக்கையில், ( உடுப்பிட்டி நிருபர் எம் வரதராஜன்) ஆக நான் இருந்தேன்.

குருநாதன் சன், வீக்கெண்ட் ஆகியவற்றுக்கும் திருமலை மாவட்டச் செய்தியாளராகச் செயலாற்றினார்.

அவரது தமிழ் தினபதித் தமிழ். முத்து முத்தாக ஆறு ஏழு சொற்களில் வசனம் எழுதுவார். ஆங்கிலத்திலும் நீண்டதாக அவர் எழுதுவதில்லை.

அவரது எழுத்திலுள்ள வீரியம் அவர் குரலில் இல்லாத போதிலும் ஆறுதலாக, ஆனால் ஆழமாக அவரது எழுத்தினைப் போலவே பேசுவார்.

உதயனில் பணியாற்றக் கிடைத்த வேளை நானும் அவரும் நண்பர் பேரின்பமும் அவருக்காகவும் எங்களுக்காகவும் வீடும் அறையும் தேடிய நாட்களை நினைக்கிறேன்.

அதுபோல உதயனைவிட்டு அவர் விலகி வந்த பின்னர் ரூபவாஹினியில் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, தமக்கு ஒரு வீடு பார்க்கச் சொல்லி, நானும் அவரும் வீடு பார்த்த நினைவும் வருகின்றது.

சூடாமணியில் பின்னர் சிறிது காலம் பணியாற்றிய போது இவரையும் ஏனையவர்களையும் போய் சந்திப்பேன்.

சக்தி தொடங்கிய காலப்பகுதியில் இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் விருது இவருக்கு கிடைத்தபோது மூத்த ஊடகவியலாளர் வீ. வரதசுந்தரம் மாஸ்டர் என்னைத் தொடர்பு கொண்டு இவருக்கு ஒரு நேர்காணல் அம்சத்தை வழங்கக் கேட்டார்.

காலைக்கதிர் என்று அப்போ ஒளிபரப்பான நேரடி ஒளிபரப்பில் குருநாதன் கலந்து கொண்டார்.

குருநாதன் தாம் முதன்முதல் தொலைக்காட்சியில் தோன்றியமையையிட்டு சிறுபிள்ளைபோல அளவற்ற மகிழ்ச்சி யடைந்தார்.

அண்மையில் மூத்த ஊடகவியலாளர் ஈழநாடு கந்தசாமி அண்ணர் இலங்கை சென்றிருந்தபோது திருமலை போவதாகச் சொன்னார்.

நான் அவரிடம், “அங்கு போனால் குருநாதனைச் சந்தியுங்கள். அவருடனிருந்து என்னுடன் பேசுங்கள்; நான் ஆகஸ்ட் போவேன்; போய்ச் சந்திப்பேன்” என்றேன்.

திருமலை போனபின்னர் கந்தசாமி அண்ணர் எனக்கு ” கோல்” எடுத்தார்.
” வரதர் ! இப்போ குருநாதனை சந்திப்பது கஷ்டமாம். ஏனெனில் அவர் பல விடயங்களை…… மறக்கிறாராம்” என்றார் சோகத்துடன்…!

எத்தனையோ செய்திகளை உள்ளூர் ஊடகங்களுக்கும் அனைத்துலக ஊடகங்கள் மட்டிலும் வழங்கிய அண்ணன் குருநாதனின் செய்தியைக் கந்தசாமி அண்ணர் சொன்னபோது அவர் இன்னொன்றையும் சொன்னார்..
” வரதர். நாளைக்கு நமக்கும் எப்படியோ.. இப்பவும் இந்த வயதிலும் எங்கட ஆட்கள் அடிபிடிப் படுகிறாங்கள்…நாம் எல்லாவற்றுக்கும்ஆயத்தமாக இருக்க வேண்டும் ” என்று.

பல நினைவுப் பதிவுகளை வழங்க வேண்டிய பலர் நம்மிடமிருந்து பிரிவதற்கு முன்னர் அவர்களின் மனப்பதிவுகள் மறைந்துவிடும் துயரம் இன்று வழமையானதொன்றாகி விட்டது. திடீர் திடீரென அப்படி ஏற்பட முன்னர், இன்றைய
இளைய ஊடகவியலாளர்கள் இவ்விடயத்தில் கவனமெடுப்பது சமூகம் சார்ந்த ஒரு நல்ல பணியாக அமையும்!

இது நிகழ்ந்து நினைவுகள் மறைய முன்னர் அவரது பிரிவுத்துயர் நம்மைப் பற்றிக்கொண்டுள்ளது.

பல விருதுகள், கௌரவங்கள் பெற்றவர் குருநாதன் என்று இங்கு குறிக்க மனதுக்குக் கஷ்டமாக உள்ளது.

இந்நாட்களில் கிடைக்கும் ” விருதுகள்” என்ற சொற்பதம் அவரின் ஆளுமையையும் திறமையையும் இப் பதிவில் நலினப்படுத்திவிடுமோ என்று..!

அவர் பெற்ற விருதுகள் பட்டங்களை விட ” குருநாதன்” என்று அவரது பெற்றோர் வைத்த பெயரே அவர் பெற்ற சிறந்த விருதாகும்.

என்றோ எங்கோ ஓர் ஊடகத்தின் பொறுப்பான பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ஆற்றலையும் வல்லமையையும் பெற்றவர் எனில் உயர்வு நவிற்சியன்று.

ஊடகத்துறையில் ஒரு குருநாதனே! சக ஊழியர்களுடனான உங்கள் அன்பிற்கும் நட்பிற்கும், இக்கட்டான காலப்பகுதிகளில்
எம் மக்களுக்குச் செய்த செய்திப் பணிகளுக்கும் நன்றி நன்றி நன்றி!

என் ஆழ்ந்த அஞ்சலி!!!

சின்னையா குருநாதன் ஈழத்தமிழ் ஊடகத்துறையின் முன்னோடி! யாழ்.ஊடக அமையம்:-

இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகையாளர்களில் ஒருவரான சின்னையா குருநாதனின் மறைவு குறித்து யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு வரை 58 வருடங்களாக அந்த துறையில் இடையறாது தனது பணியை மேற்கொண்டு வந்த அவர், தினபதி, சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி, தினக்குரல் மற்றும் உதயன் போன்ற தமிழ்ப்பத்திரிகைகளிலும் தமிழ் நெற் ஆங்கில இணையத்தளத்திலும் அர்ப்பணிப்புடன் அவர் பணியாற்றியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் பதுங்கு குழியினில் இருந்து ஊடகப்பணியாற்றியதை தனது மரணத்தின் இறுதிக்காலத்திலும் அவர் இளம் ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொள்ள பின்னின்றதில்லை.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் போதும் தனது ஊடகப்பணியினை விட்டு தப்பியோடாது முழுநேரமாக ஊடகப்பணியாற்றிய ஒரு சிலரினுள் அமரர் சின்னையா குருநாதனின் பெயரும் ஈழ தமிழ் ஊடக வரலாற்றினில் நிலைத்திருக்கும்.

தமிழ், ஆங்கில மொழிகளில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவும் ஆற்றலும், தான் சார்ந்த துறையில் அவர் கொண்டிருந்த பட்டறிவும் அவரை ஒரு சிறந்த ஊடகவியலாளராக சமூகத்தில் இனங்காட்டியிருந்தது.

மறைந்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் நன்மதிப்பினை பெற்றிருந்த ஒருசில ஊடகவியலாளர்களுள் சின்னையா குருநாதனும் ஒருவராவார்.

தனது மரணம் வரையினில் ஊடகவியலாளனாக இருந்துவிட அவர் கொண்ட ஆசை நிறைவேறியிருக்கின்றது.யாழ்.ஊடக அமையம் இறுதிக்காலத்தினில் தனித்துபோயிருந்த அந்த மூத்த ஊடகவியலாளனை தேடி தன்னால் இயன்ற உதவிகளை செய்திருந்தது.

இப்போது அறிக்கைகள் விடுத்துக்கொண்டிருக்கும் அரசியல் தரப்புக்கள் அவரை திரும்பிக்கூட பார்த்திருக்கவில்லையென்ற தகவலையும் அவர் கவலையுடன் பகிர்ந்து கொண்டதையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் யாழ்.ஊடக அமையம் தனது கவலைகளை பதிவு செய்து கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றது.

யாழ்.ஊடக அமையம்:-

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More