கிளிநொச்சி – முகமாலை பகுதியில், யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் முகமாலைப் பகுதியே அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும், யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட நிலையில் தொடர்ந்தும் வெடிபொருள் அச்சம் காணப்படுகின்றதென அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப்பகுதியில் வெடிபொருட்களில் சிக்கி பலர் உயிரிழப்பதுடன் பலர் தமது உடல் அவயங்களையும் இழக்க நேரிடுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வெடிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், இவ்வாறான பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விடுவிக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில், சிலர் மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்து மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளவதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் இது தொடர்பில், சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள், இரும்புகள் போன்றவற்றினை எடுப்பதற்காக பலர் வருவதாகவும் அவர்கள் வெடிபொருள் ஆபத்துகள் குறித்து இடும் பதாதைகள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை சேதப்படுத்துவதுடன் அவற்றினை எடுத்தச் சென்று விடுவதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பணிகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் குறித்த ஆபத்தான பகுதிகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.