குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு பாலங்குளத்தினை முழுமையான புனரமைப்பிற்கு உட்படுத்தி விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அதிகாரிகளிடமும் ஆரோக்கியபுரம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போர் காலத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் இக்குளத்தின் அணைக்கட்டிலும் வான் பகுதியில் இருந்தும் அகற்றப்பட்ட போதிலும் குளம் புனரமைக்கப்படாததன் காரணமாக குளத்தில் இருந்து கூடுதலான நீர் வெளியேறுகின்றது.
குளத்தின் அணைக்கட்டினை உயர்த்தி குளத்தினைப் புனரமைப்பதன் மூலம் கூடுதலான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும். மேலும் நெற்செய்கை கூடுதலாக இடம் பெறாததன் காரணமாக வயல் நிலங்களில் மணல் அகழ்வு இடம் பெறுகின்றன. இது தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலாளருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளன. மணல் அகழ்வு நடைபெறுவதற்கு முக்கிய காரணம் குளத்தின் கீழான கூடுதல் விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதே காரணமாக உள்ளது.
எனவே பாலங்குளத்தினை முழுமையாகப் புனரமைப்பதன் மூலம் 250 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் விவசாய முயற்சிகள் மேற்கொள்ள முடியும் என ஆரோக்கியபுரம் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆரோக்கியபுரம் கிராமத்தில் எண்பதிற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.