பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கைதிகளின் மனக்குறைகள், வழக்கு விசாரணைகள் தொடர்பான விடயங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார். இதன் போது கண்டி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தனக்கெதிராக மூன்று வௌ;வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் ஒரு வழக்கில் ஒரு வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய இரண்டு வழக்குகளிலும் தண்டனையுடன் ஒரு வருடம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த 3 வழக்குகளிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருப்பதன்படி 3 வருடங்கள் தனித்தனியே புனர்வாழ்வுக்குச் செல்ல வேண்டுமா அல்லது மூன்று வழக்குகளின் தீர்ப்புக்கு அமைய ஒரு வருடம் மாத்திரம் புனர்வாழ்வுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டுமா என்பது தெளிவில்லாமல் இருப்பதனால்தான் குழப்பமடைந்திருப்பதாக அந்தக் கைதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சட்ட முரண்பாடுகள், சட்டரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இது தொடர்பில் விசேடமாக சட்டத்தரணி ஒருவரை நியமித்து அந்த சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.