குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொது மன்னிப்பு கோரப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். 600 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தி லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும், அபராதமும் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையிலான தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு சில் ஆடைகளை விநியோகம் செய்ததாக லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரப் போவதில்லை என லலித் வீரதுங்க, அண்மையில் சிறையில் அவரை பார்வையிடச் சென்ற கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.