குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சுமத்திய குற்றசாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய சாட்சி ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை என வழக்கு தொடுனர் தரப்பு மன்றில் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை , வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.
அதன் போது வழக்கு தொடுனர் தரப்பின் தொகுப்புரையினை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் நிகழ்த்தினார்.
அதன் போது , இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை.
ஏனைய 7 எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரியான , பூபாலசிங்கம்
ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் , நான்காம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் , ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் , எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் ஒன்பதாம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றசாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.
நாளைய தினம் புதன்கிழமை எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது. அதனை அடுத்து ஒன்பது எதிரிகளையும் நாளைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.