எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்துவது என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. 2024ல் நடைபெறவுள்ள 33வது ஒலிம்பிக் போட்டி மற்றும், 2028ல் நடைபெறவுள்ள 34வது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரங்களை தேர்வு செய்யும் கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றது.
2024 போட்டியை நடத்த, ஜெர்மனியின் ஹம்பர்க், இத்தாலியின் ரோம், ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஆகியவையும் விருப்பம் தெரிவித்திருந்தன. எனினும் அவை நிதி நெருக்கடி காரணமாக இறுதியில் விலகிக் கொண்டதனால், பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடத்துவது என, ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதேவேளை 2028ல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவரும் முன்வராததால், போட்டியின்றி லொஸ் ஏஞ்சலஸ் வென்றுள்ளது. 1900 மற்றும் 1924ல் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில் நூறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அங்கு மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.