இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் கூட்டுப்போர்ப்பயிற்சி நடவடிக்கையான ‘தியகாவா’ (கடல் காகம்) 2017 போர் பயிற்சி கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை முப்படையினர் உறுப்பினர்கள் மற்றும் 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் இந்த போர்ப்பயிற்சி செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமானது.
இன்று (14) முற்பகல் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற போர்ப்பயிற்சியினை தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாகப் பார்வையிட்ட ஜனாதிபதி ‘கடல்காகம்’ யுத்த பயிற்சியில் இணைந்து கொண்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.