சைற்றம் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வாவின் தலைமையில், உயர் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளின் செயலாளர்கள், சட்டமா அதிபரின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு 2017 செப்டெம்பர் 11 ஆம் திகதி அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. இக்குழு பத்து நாள் காலப்பகுதியில் இலங்கை வைத்திய சங்கம், பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள், மருத்துவ தொழில்வல்லுநர்கள், விரிவுரையாளர்கள் சங்கம், பெற்றோர் பிரதிநிதிகள், சைற்றம் முகாமைத்துவ பிரதிநிதிகள் போன்ற தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
இக்கலந்துரையாடல்களின் பெறுபேறாக இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் உள்ளிட்ட தரப்பினருடன் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளனர். இந்த கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் சைற்றம்; நிறுவனத்திற்கு மருத்துவ பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக மாணவர்களை சேர்த்துக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குழு சிபாரிசுசெய்துள்ளது.
உயர்கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் இப்பரிந்துரையின் தீர்மானத்தை சைற்றம் நிறுவனத்திற்கு விசேட கல்லூரிகள் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் இன்று அறிவித்துள்ளார். இதன் படி 2017-12-31 வரை அல்லது மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டதிட்டங்கள் வர்த்தமாணியில் அறிவிக்கப்படும் வரை அல்லது இவ்விரண்டில் முதலில் இடம்பெறும் செயற்பாடு இடம்பெறும் வரை மேற்குறிப்பிடப்பட்டவாறு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக மேலும் சில முன்மொழிவுகள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவை எதிர்காலத்தில் மேலும் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
இந்த சாதகமான நடவடிக்கையுடன் பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களது பெற்றோர், விரிவுரையாளர்கள் குழாம் மற்றும் பீடாதிபதிகள், பல்கலைக்கழக நிறுவாகம், மாணவர் சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையிலான குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.