நேற்றுக்காலை காலை லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பார்சன் கிறீன் நிலக் கீழ் (parsons green under ground tube station ) புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் டோவர் துறைமுகப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 30 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் கென்ற் பகுதி காவல்துறையினர் இன்றையதினம் 18 வயதான இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படாதநிலையில் மேலதிக விசாரணைகளை மெட்ரோ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .
குறித்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று தமது உத்தியோகபூர்வ இணையத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை லண்டனில் இடம்பெற்ற மேற்படி குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் அடுத்து ஸ்கொட்லாந்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து பூராகவும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் பொருட்கள் அல்லது பொதிகள் காணப்படுமிடத்து தமக்கு அறிவிக்குமாறும் காவல்துறையினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.