ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடர் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இன்றையதினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அங்கு விசேட உரையாற்றவுள்ளார்.
அதேவேளை பொதுச் சபை கூட்டத்தொடருடன் இணைந்ததாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக பேரவையின் கூட்டத்தொடர் நேற்றையதினம் ஐ நா தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரச தலைவர்கள் மட்டும் பங்குபற்றும் இக்கூட்டத்தொடரில் ஜனாதிபதியும் கலந்துகொண்டார். உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திறனை மேலும் அதிகரித்தல், ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் நிர்வாக செலவுகளை குறைத்து உறுப்பு நாடுகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் செயற்படுவது தொடர்பாகவும் விரிவாக கவனம்செலுத்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் இக்கூட்டத்தொடரில் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு 2 – ஐ.நா. சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்குபற்ற ஜனாதிபதி அமெரிக்கா புறப்பட்டார்.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இன்று (17) முற்பகல் அமெரிக்காவிற்கு பயணமானார். இன்று மு.ப. 10.35 அளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் அமெரிக்காவிற்கு பயணமாகினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வு செப்டெம்பர் 19 ஆம் திகதி நியுயோர்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், அன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அ அமர்வில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உரை நிகழ்த்தும் மூன்றாவது பொதுச் சபை அமர்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அமர்வில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் பலருடனும் ஜனாதிபதி அவர்கள் கலந்துரையாடவுள்ளார்.