கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அனுமதி கோரியிருந்த நிலையில், அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விஜயதசமியில் வழிபட, கே.ஜே.ஜேசுதாஸிற்கு பத்மநாப சுவாமி கோயில் அனுமதி கொடுக்குமா?
Sep 18, 2017 @ 03:50
கேரளாவில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இதுவரை 14 மொழிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். இவர் பாடல்கள் பாடத் தொடங்கி 56-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் மூலவர் குருவாயூரப்பன் மீது பல பாடல்களை பாடி உள்ளார். அதேபோல் சபரிமலை ஐயப்பனைப் பற்றி இவர் பாடிய பாடல்கள் இன்றும் போற்றப்படுகின்றன.
ஆனால், குருவாயூரப்பன் கோயிலில் வேற்று மதத்தினர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பல பாடல்கள் பாடியிருந்தும் இன்னும் குருவாயூரப்பனை அவரால் தரிசிக்க முடியவில்லை. இந்நிலையில் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில், வரும் 30ம்-தேதி விஜயதசமி அன்று வழிபாடு நடத்த அனுமதி கேட்டு கோயில் நிர்வாகத்துக்கு கே.ஜே.ஜேசுதாஸ் கடிதம் எழுதி உள்ளார். தனது பிரதிநிதியின் மூலம் கோயில் நிர்வாகத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். இந்தக் கோயிலிலும் வேற்று மதத்தினரை அனுமதிப்ப தில்லை.
இதுகுறித்து பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் கூறும்போது, ‘‘இந்து மதத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளது. எனினும், யேசுதாஸ் கடிதத்தின் மீது கோயில் நிர்வாகம்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
கலைத் துறைக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் கே.ஜே.ஜேசுதாஸுக்கு 1975-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது