துனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வாழும் துனிசியாவில் ஷரீஅத் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகின்றதுடன் அங்கு பெற்றோரின் சொத்துகளில் அங்குள்ள பெண்களுக்கு சம உரிமை கிடையாது.
மேலும் அங்கு முஸ்லிம் இளைஞர்கள் வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற போதிலும் முஸ்லிம் பெண்ணை காதலிக்கும் வேற்று மதத்தவர் முஸ்லிமாக மதம் மாறிய பின்னர்தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற சட்டம் கடந்த 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் இந்த சட்டம் பெண்களுக்கான சம உரிமையை பறிப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைத்து துனிசியா அதிபர் பெஜி கைய்ட் எஸ்ஸெப்ஸி உத்தரவிட்டிருந்தார்.
இந்த ஆணைக்குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 1973-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தை நீக்கி, காதலனை மதமாற்றம் செய்யாமல் முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு அனுமதி அளித்து துனிசியா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அனுமதிக்கு அங்குள்ள பெண்ணியக்கவாதிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், புனித குர்ஆனில் உள்ள அடிப்படை சட்டத்தை மீறீய வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளதாக இங்குள்ள மதவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.