தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்றையதினம் நடைபெற்ற தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமுலாக்க மேடை என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள் எனவும் அதை முற்றிலும் இல்லாத நிலை ஆக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்த அவர் வறுமை காரணமாக குழந்தைகள் வேலைக்கு செல்கிறார்கள் என சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் முதல் அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்த அவர் குழந்தைகள் பெற்றோருக்கு பாரமாக தெரியவில்லை எனவும் தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் பெரிய அளவில் இல்லை எனவும் தெரிவித்தார்