குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
மியன்மார் றோகிஞ்சா முஸ்லீம் மக்களை தெற்கில் பாதுகாப்பாக தங்க வைக்க முடியாவிட்டால் , வடக்கு மாகாணத்திற்கு அனுப்பி வையுங்கள். வடமாகாணத்தில் தங்கவைப்பதை வடமாகாணசபை எதிர்க்கப்போவதில்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போது சிவாஜிலிங்கம் விசேட கவனயீர்ப்பு பிரேரணையை முன் மொழிந்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
மியான்மார் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதனால் அங்கு , குழந்தைகள், பெரியவர்கள் என சகலரும் கொல்லப்படுகின்றார்கள்.
இந்நிலையில் மியன்மார் நாட்டின் முஸ்லிம் மக்கள் 31 பேர் யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை கடல்வழியாக இலங்கைக்குள் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஐ.நா சபையினால் பொறுப்பேற்கப்பட்டு கொழும்பு- கல்கிசை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே பௌத்த மதவாதிகள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், அந்த நாட்டு மக்கள் பூசா முகாமில் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந் நடவடிக்கையினை வடமாகாணசபை கண்டிக்கின்றது. அந்த முஸ்லிம் மக்களை நாடு கடத்தவேண்டும் எனவும் பேச்சுக்கள் நடக்கின்றன. ஐ.நா சபை பொறுப்பேற்று இருக்கும் நிலையிலும் அந்த மக்களுக்கு இவ்வாறான நிலை உருவாகியுள்ளமை கவலையளிக்கின்றது. எனவே அந்த மக்களை வடமாகாணத்தில் தங்கவைப்பதற்கு வடமாகாணசபை இணக்கம் தெரிவிக்கின்றது. அதன் ஊடாக அந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறோம்.
அந்த முஸ்லிம் மக்கள் வடமாகாணத்தில் தங்கவைப்பதை வடமாகாணசபை எதிர்க்கப்போவதில்லை என கூறினார். அந்த விசேட கவனயீர்ப்பு பிரேரணை சபையில் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.