இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் 14 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டியிருப்பதை இந்திய இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் உள்ள டமலா நுலா காட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு 14 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை செல்வதை இராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.
பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்த சுரங்கப்பாதை தோண்டப்படுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிந்த இராணுவ உயர் அதிகாரிகள், விரைந்து சென்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு சிலர் சுரங்கப் பாதை தோண்டுவதை கண்டு துப்பாக்கியால் சுட்டதும், அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் சுரங்கம் அமைத்துக் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள இராணுவ அதிகாரிகள், அங்கிருந்து திசை காட்டும் கருவி, துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.