குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகத்தால் ஆரோக்கியபுரம் கிராம மக்களுக்கு அமைத்து வழங்கப்பட்ட பொதுக் கிணறு ஒன்று குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 2011ஆம் ஆண்டு குடிநீர் நெருக்கடியினை கருத்திற் கொண்டு பிரதேச செயலகம் ஒப்பந்தக்காரர் ஒருவர் மூலமாக குறித்த கிணறு அமைக்கப்பட்டிருந்தது.
அமைத்த நாளில் இருந்தே கிணற்றின் உட்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் உடைவுகள் ஏற்பட்டு உவர் தன்மையுடன் மழை நீர் கிணற்றுக்குள் இறங்குவதாக பிரதேச செயலாளரிடம் கிராம மக்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்றுவரை குறித்த கிணறு புனரமைப்புச் செய்யப்படவில்லை.
குறித்த கிணற்றினை பொறுப்பெடுத்த ஒப்பந்தகாரர் உரிய முறையில் அமைக்கவில்லை. பிழையாக வேலை மேற்கொண்டுள்ளார் என கிராம மக்களினால் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது இப்பகுதியில் வாழ்கின்ற ஐம்பது வரையான குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீரையே பெற்றுக் கொள்வதாகவும் கிணற்றில் நீர் உள்ளது. ஆனால் அதனை குடிநீராகப் பயன்படுத்த முடியாதுள்ளது. எனவே குறித்த கிணற்றினை புனரமப்பதற்கு துணுக்காய் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரோக்கியபுரம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.