212
இலங்கையில் தஞ்சமளிக்கப்பட்டுள்ள ரொஹிங்கிய அகதிகள் மீது பௌத்த கடும்போக்காளர்களினால் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.சொந்த நாட்டில் உயிராபத்துக்களுக்கு உள்ளாகி பாதுகாப்பு தேடி 6 வருடங்களுக்கு முன்னர் மியன்மாரில் இருந்து வெளியேறியவர்களுக்கே அகதிகளுக்கான ஐநா தூதரகத்தின் அனுசரணையில் அரசாங்கத்தினால், இலங்கையில் அபயமளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ரொஹிங்கியாக்களுக்கு இலங்கையின் சட்ட ரீதியாகவும், சர்வதேச நியமங்களின் அடிப்படையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் எந்தவிதமான சட்டவிரோதச் செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை.
இவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் தஞ்சம்கோரி, நாட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்தவர்களல்ல. வழி தெரியாமல் வட கடற்பரப்பினுள்ளே இவர்களுடைய படகு ஒதுங்கியபோது, இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற காரணத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இவர்களை கடற்படையினர் கைது செய்து நாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்திய அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த இவர்கள், மேற்கத்தைய நாடு ஒன்றில் அபயம் தேடுவதற்காக, அங்கிருந்து புறப்பட்டிருந்தார்கள். கடல் வழியாகப் புறப்பட்ட அவர்களுடைய படகு இலங்கைக் கடற்பரப்பினுள் புகுந்த வேளையிலேயே அவர்களை, கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை பொலிசாரிடம் கையளித்திருந்தார்கள்.
பொலிசார் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குடிவரவு, குடிகயல்வு சட்ட விதிகளை மீறினார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை, மிரிஹானையில் உள்ள அந்தத் திணைக்களத்திற்குச் சொந்தமான இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த ரொஹிங்கிய அகதிகள் பற்றி அகதிகளுக்கான ஐநா தூதரகம் – யுஎன்எச்சிஆர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த அதிகாரிகளும் இவர்களுடைய நலன்களில் அக்கறை செலுத்தியிருந்தனர்.
யுஎன்எச்சிஆரின் பதுகாப்பில் இருந்த வேளை நடந்த தாக்குதல்
மிரிஹான முகாமில் தங்கியிருந்த வேளை, ரொஹிங்கிய பெண் ஒருவர் மே மாதம் 19 ஆம் திகதி அந்த முகாமின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரினால் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்காக 31 ரொஹிங்கியர்களையும் முழுமையாகப் பொறுப்பேற்ற அகதிகளுக்கான ஐநா தூதரக அதிகாரிகள், கல்கிசை பகுதியில் அவர்களுக்கென வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று, அங்கு பாதுகாப்பாகத் தங்க வைத்திருந்தார்கள்.
மியன்மார் அகதிகளான ரொஹிங்கியாக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கான ஐநா தூதரகத்தின் பாதுகாப்பான இல்லம் தொடர்பில் அரச புலனாய்வாளர்கள், பிரதேச பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கைக் கொண்டுள்ள தீவிர பௌத்த மதகுருமார்களின் தலைமையில் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் அடங்கிய குழுவொன்று செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்த ரொஹிங்கியாக்கள் தங்கியிருந்த வீட்டைச்சுற்றி வளைத்தனர்.
மியன்மாரில் பௌத்த பிக்குகளைக் கொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளே இந்த வீட்டில் தங்கியிருப்பதாகக்கூறி, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரி, அவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டிருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள ராவய என்ற தீவிரவாத அமைப்பின் தலைவருமாகிய அக்மிமன தயாரட்ன தேரரின் தலைமையில் சென்ற இக்குழுவினர், பௌத்த பிக்குகளின் உத்தரவுக்கமைய அந்த மாடிக்கட்டிடமாகிய வீட்டின் முன்வாயிலை உடைத்து ஜன்னல்களை அடித்து நொறுக்கி, உள்ளே புக முயற்சித்திருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது 3 பொலிசார் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அகதிகளைக் கைது செய்ய வேண்டியிருந்தது…….
இதனால் அந்த வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 குழந்தைகள், 7 பெண்கள் உள்ளிட்ட ரொஹிங்கியாக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கலகக்காரர்களைப் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
இந்த மியன்மார் அகதிகளை நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கலகக்காரர்கள் பொலிசார் முன்னிலையில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், கலகக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக, ரொஹி;ங்கியாக்களை பொலிசார் கைது செய்து தம்முடன் கொண்டு சென்றார்கள்;. இந்தத் தகவலை பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
சில மணித்தியாலங்களிலேயே பொலிசார் அந்த அகதிகளை மீண்டும் கல்கிசை யுஎன்எச்சிஆரின் பாதுகாப்பு இல்லத்தில் மீண்டும் கொண்டு வந்து விட்டிருந்தனர். இதனைக் கேள்வியுற்ற பௌத்த மதகுருக்கள் தலைமையிலான கலகக்கும்பல் மீண்டும் வந்து ரொஹிங்கியாக்களை தாக்க முயற்சித்தனர். அத்துடன் இவர்களுக்கு யுஎன்எச்சிஆர் அதிகாரிகளே தஞ்சமளித்திருந்தார்கள் என்பதை அறிந்து, கொழும்பில் உள்ள ஐநா தலைமைகயத்தின் எதிரிலும் இந்த அகதிகளை உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
அரசாங்கத்தினதும், ஐக்கி;ய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகத்தினதும் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் மீது அத்துமீறிய வகையில் பௌத்த மத கடும்போக்காளர்கள் நடத்திய தாக்குதலை முறியடித்து, வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த அந்த அகதிகளின் பாதுகாப்பை பொலிசாரினால் உறுதி செய்ய முடியாமல் போய்விட்டது,
கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்கி அவர்களைக் கலைந்து போகச்செய்ய முடியாத நிலையிலேயே பொலிசார் இருக்கின்றார்கள் என்பது இதன் மூலம் புலனாகியிருக்கின்றது. கட்டுப்பாடுகளை மீறுகின்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சட்டத்தையும் ஒழுங்கையும் ந்pலைநாட்ட முடியாத வகையிலேயே இந்த நாட்டின் பொலிஸ் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது என்பதையும் இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஆபத்தான நிலைமை
ரொஹிங்கிய அகதிகளை மியன்மார் நாட்டின் முஸ்லிம் பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பௌத்த கடும்போக்காளர்கள் திட்டமிட்டிருக்கின்றார்கள் என்பது குறித்த தகவல் புலனாய்வு பிரிவினருக்கு எட்டியிருந்தது. இருப்பினும், அந்த முயற்சி கைகூடாத வகையில் முன்னெச்சரிக்கையாக, அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் பொலிசாரினால் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின் றது.
இந்த நாட்டின் அரசியலில் மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கு விடயங்களிலும் பௌத்த மத கடும்போக்காளர்களின் கைகளே ஓங்கியிருக்கின்றன என்ற கசப்பான உண்மை ரொஹிங்கிய அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் ஓங்கி ஒலித்திருக்கின்றது.
ஜனநாயகத்தையும் நாட்டில் நீதியான ஆட்சியையும் உறுதிப்படுத்தவதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி அரசாங்க ஆட்சியதிகாரத்தின் கீழ், இத்தகைய நிலைமை நிலவுகின்றது என்பதை நியாயமான சிந்தனையுடைய எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அத்துடன் இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்த நாட்டில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இன ரீதியாகவும், மத ரீதியாகவும் அடக்குமுறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மனித நாகரிகமும், விஞ்ஞான தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றுள்ள ஒரு காலப்பகுதியில் ஜனநாயகம் என்ற அரசியல் நாகரிகப் போர்வையின் கீழ் தொடர்கின்ற இந்த இன ஒடுக்கு முறையானது, ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தை உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டங்களி;ல் பெரும் சிக்கல்களுக்குள் தள்ளியிருக்கின்றது.
அந்த அடக்குமுறை போக்கில் ருசி கண்ட பௌத்த கடும் போக்காளர்கள், அல்லலுற்று உயிருக்கஞ்சி ஓடும் வழியில் கரையொதுங்கிய பெண்களையும் சிறுவர்களையும் பெரும் எண்ணிக்கையில் கொண்டிருந்த ரொஹிங்கிய அகதிகள் மீதும் தமது கைவரிசையைக் காட்டியிருக்கின்றனர். மியன்மார் முஸ்லிம் பயங்கரவாதிகள் என சித்தரித்து அவர்களை நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலானது, மனிதாபிமானத்தை மீறிய மிக மோசமான செயலாகவே, பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின் றது.
யுஎன்எச்சிஆரின் முகம் சுழிப்பும் பூஸா முகாமுக்கான இடம் மாற்றமும்
இந்த நாட்டில் யுத்த மோதல்கள் காரணமாக இடம்பெயர நேர்ந்திருந்த உள்ளுரில் இடம்பெயர்ந்த அகதிகள், மற்றும் கடல் கடந்து, அயல்நாடாகிய இந்தியாவில் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்திருந்த அகதிகளின் நலன்களில், முப்பது வருடங்களுக்கு மேலாக (யுஎன்எச்சிஆர்) அகதிகளுக்கான ஐநா தூதரகம் பணியாற்றி வருகின்ற நிலையில் இந்த ரொஹிங்கிய அகதிகளைத் தக்குவதற்கும் அவர்களைப் பலவந்தமான இங்கிருந்து வெளியேற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்;ட பௌத்த தீவிரவாதிகளின் செயலால் ஐநா விசேடமாக அதிருப்தியடைந்துள்ளது.
குறிப்பாக கல்கிசையில் யுஎன்எச்சிஆரினால் ரொஹிங்கிய அகதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு இல்லத்திற்கு முஸ்லிம்களுக்கு எதிரான பகைமை போக்கைக் கடைப்பிடித்து வருகின்ற கடும்போக்காளர்களான பௌத்த தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பொலிசாரினால் பாதுகாப்பு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனால் உடனடியாகவே இந்த அகதிகள் ஐநா அதிகாரிகளின் ஒப்புதலுடன் காலியில் உள்ள பூஸா முகாமுக்கு பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இந்த அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே, இராணுவத்தினரதும், பயங்கரவாதப் புலனாய்வு அதிகாரிகளினதும் பொலிசாரினதும் உச்ச கட்ட பாதுகாப்பு மிகுந்த இடமாகக் கருதப்படுகின்ற பூஸா முகாமுக்கு, இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைக்காக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூஸா முகாமானது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யும் முக்கிய இடமாக விளங்குகின்றது. பயங்கரவாதிகள் என அரசாங்கத்தினாலும் சிங்களத் தரப்பினராலும் சித்தரிக்கப்படுகின்ற விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்கள், அந்த அமைப்பினருக்கு உதவினார்கள், அந்த அமைப்பினருடன் இணைந்து படையினர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களையே இங்கு தடுத்து வைக்கப்படுவது வழக்கம்.
இங்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட பலர் மிக மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்த நீண்ட வரலாறும் உள்ளது. அது மட்டுமல்லாமல் அங்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஆட்கள் காணாமல் போயிருப்பதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற சந்தேக்தில் கைது செய்யப்பட்டவரக்ளை விசாரணை செய்வதற்காக, பல்வேறு வடிவங்களிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு இசைவாக சிறு சிறு விசாரணை அறைகளைக் கொண்ட, பூஸா முகாமிலேயே, பௌத்த கடும் போக்காளர்களுடைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் தாக்குதல் செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்காக ரொஹிங்கிய அகதிகள், இப்போது பொலிசாரினால் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ரொஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதலின் பின்னணி
மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் மிரிஹான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ரொஹிங்கிய அகதிகளில் ஒரு பெண் ஒருவர் சுகவீனமடைந்திருந்தார். காய்ச்சல் பீடித்திருந்த அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக அங்குள்ள அதிகாரிகள் அவரை, ஜுன் மாதம் 16 ஆம் திகதி கலுபோவிலை வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்கள்.
இந்தப் பெண்ணுக்கான சிகிச்சைகள் முடிவடைந்து அவர் குணமாகியதையடுத்து, அவரை மீண்டு; அழைத்துச் செல்லுமாறு வைத்தியசாலை நிர்வாகம் மிரிஹான இடைத்தங்கல் முகாம் அதிகாரிகளுக்கு ஜுன் மாதம் 19 ஆம் திகதி தொலைபேசி மூலமாக அறிவித்தது. அந்த நேரம் அன்றைய கடமை முடிந்திருந்த, அங்;கு கடமை புரிகின்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு கலுபோவிலை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
வைத்தியசாலை அதிகாரிகளிடம் தான் மிரிஹான முகாமில் கடமையாற்றுகின்ற பொலிஸ் அதிகாரி என தெரிவித்து, அந்தப் பெண்ணை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அந்தப் பெண்ணை பொரலஸ்கமுவ லெகுமால என்ற இடத்திற்கு தனது சொந்தக்காரில் கொண்டு சென்ற அவர் அன்றைய இரவு முழுதும் அவரை வன்புனர்வுக்கு உட்படுத்தியிருந்தார். இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்ததுடன், அந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகளின் பின்னர் நுகேகொடை கங்குடவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கை ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.
அது மட்டுமல்லாமல் மிரிஹான இடைத்தங்கல் முகாமின் பாதுகாப்புக்காகப் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலேயே அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த அகதிப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்ததைச் சுட்டிக்காட்டி, இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த ரொஹிங்கிய அகதிகளைப் பாதுகாப்பான ஓரிடத்திற்குக் கொண்டு செல்லுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, யுஎன்எச்சிஆர் அதிகாரிகளினால்; கல்கிசையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு இல்லத்தில் அந்த அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரொஹிங்கிய பெண் மீதான வல்லுறவு வழக்கில் தண்டனை பெறுவதில் இருந்து தப்புவதற்காக, ரொஹிங்கிய அகதிகளை மியன்மார் முஸ்லிம் பயங்கரவாதிகள் என சித்தரித்து முகநூலில் செய்யப்பட்ட பிரசாரத்தைத் தொடர்ந்தே கல்கிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான வன்முறையில் ஈடுபட்ட கும்பல் ஒன்று சேர்ந்தனர். அதே பொய்ப்பிரசாரம் காரணமாக ரொஹிங்கிய முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு எதிராக அணி திரள்வதற்கான தலைமையை சிங்கள ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அக்மிமன தயாரட்ன தேரர் வழங்கியிருந்தார். அவருடன் அந்த அமைப்பின் செயலளாரும் ஏனைய சில பௌத்த பிக்குகளும் ரொஹிங்கிய அகதிகள் தங்கியிருந்த வீட்டின் மீதான தாக்குதலில் பங்கேற்றிருந்தனர்.
ரொஹிங்கிய அகதிகள் 31 பேரையும் முஸ்லிம் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, கடும்போக்காளர்களான பௌத்த மத குருக்களின் உதவியோடு அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டால், ரொஹிங்கிய பெண்ணை வன்புனர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் என்ற நோக்கத்திலேயே கல்கிசை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெளிவாகியிருக்கின்றது.
பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை
கல்கிசை வீட்டை, அக்மீமன தயராட்ன தேரர் மற்றும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரத்தன தேரர் உள்ளிட்ட முக்கிய பௌத்த மத குருமார்கள் அடங்கிய குழுவினர் தலைமையேற்றிருந்த அதேவேளை, அந்த கும்பல் கல்கிசை வீட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்காகச் சென்றதையும், அந்த வீட்டை அவர்கள் முற்றுகையிட்டிருந்ததையும், தாக்குதல் நடத்தியதையும் வீடியோ படங்கள் மூலமாக முகநூலில் தரவேற்றி, முஸ்லிம் பயங்கரவாதிகள் கல்கிசையில் கூடாரமிட்டிருப்பதாகவும், அவர்களை வெளியேற்றுவதற்காக அனைவரும் திரண்டு வரவேண்டும் என அறைகூவி கூட்டம் கூட்டிய செயற்பாடும் இடம்பெற்றிருக்கின்றது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பௌத்த மத தேரர்கள் உள்ளிட்டவர்கள் அனைவரையும் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ படக்காட்சிகளின் மூலம் பொலிசார் அடையாளம் கண்டிருந்த போதிலும் அவர்களைக் கைது செய்வதற்கு பொலிசார் உடனடியாக நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
கல்கிசை தாக்குதலில் பங்கேற்றிருந்த பௌத்த மத தேரர்களை காவி உடை தரித்த குண்டர்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வர்ணித்துள்ளார். அதேவேளை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாகிய ராஜித சேனாரத்ன அவர்களை மிருகங்களைப் போல கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இந்தத் தாக்குதலை இந்த அமைச்சர்கள் இருவரும் அரசாங்கத் தரப்பில் கடுமையாகக் கண்டித்திருந்தனர். அதேவேளை, சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க கல்கிசை தாக்குதல் சம்பவத்தில் பொலிசார் தமது கடமைகளைச் சரிவர செய்யாமல் கடமை தவறியிருக்கின்றனர் என கண்டித்துள்ளார்.
இத்தகைய பின்னணியிலேயே கல்கிசை தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர் உட்பட 8 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களை கல்கிசை நீதிமன்றம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கடும் போக்கு மாற வேண்டும்
பல்வேறு காரணங்களுக்காக தமது சொந்த இடங்களில் இருக்க முடியாமல் அல்லது வாழ முடியாமல் அபயம் தேடி வருகின்ற அகதிகளைப் பொறுப்பேற்று, அவர்களுக்குரிய வசதிகளை வழங்கி தற்காலிகமாகத் தங்க வைத்திருக்க வேண்டும் என்று ஐநாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒர் ஒப்பந்தத்;தின் அடிப்படையிலேயே மியன்மாரில் இருந்து இலங்கை வந்த ரொஹிங்கிய 30 அகதிகளுக்கு அபயமளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்குள் பிரவேசித்த இவர்களில் ஒரு பெண்ணுக்கு இங்கு வந்த பின்னர் ஒரு குழந்தை பிறந்ததையடுத:;து, அவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முதல் இரண்டு தடவைகளில் ரொஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். யுஎன்எச்சிஆர் – அகதிகளுக்கான ஐநா தூதரகத்தின் அனுசரணையுடன் தற்காலிகமாக அவர்களை அரசாங்கம் இங்கு தங்க வைத்திருந்தது. பின்னர் அவர்கள் யுஎன்எச்சிஆரின் ஏற்பாட்டில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
கடந்த 2008 ஆம் ஆண்டு, 55 பேர் வந்திருந்தனர். இவர்கள் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோன்று, 2013 பெப்ரவரி மாதம் 101 ரொஹிங்கிய அகதிகள் இங்கு தஞ்சமடைந்திருந்தனர். பின்னர் இவர்கள், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா கனடா ஆகிய நாடுகளுக்கு யுஎன்எச்சிஆர் அதிகாரிகளின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பின்னணியிலேயே இந்த வருடம் 30 ரொஹிங்கிய அகதிகள் இங்கு தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு அமெரிக்கா அல்லது கனடாவில் அபயமளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் அகதிகள் தொடர்பில் அரசாங்கம் ஐநாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாக இங்கு தங்க வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்குடைய பௌத்தர்களும் பௌத்த பிக்குகளும் கொண்டுள்ள தீவிரமான பகைமைப் போக்கைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு பிரசாரத்தின் பின்னணியில் கல்கிசை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பௌத்த பிக்குகள் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ரொஹிங்கிய அகதிகள் இங்கு வந்திருந்தபோது எங்கு போயிருந்தனர் என சீற்றத்தோடு அமைச்சர் ராஜித சேனாரத்ன வினவியிருக்கினி;றார்.
சிறுபான்மை இனங்கள் மீதும், சிறுபான்மை மதங்கள் மீதும் பௌத்த தீவிரவாதிகள் கொண்டுள்ள கண்மூடித்தனமாக வெறுப்புணர்வின் உச்ச கட்டமாகவே ரொஹிங்கிய அதகிகள் மீது கல்கிசையில் நடத்தப்பட்ட குண்டர்குழு தாக்குதல் அமைந்துள்ளது. இது பௌத்த மதத்தை தமது புனித மதமாகக் கருதி பின்பற்றுபவர்களின் தூய மதப்பற்றைக் கொச்சைப்படுத்துவதுடன், பௌத்த மதத்திற்கே அவமானத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
இந்த நாட்டின் ஏனைய இனங்கள் மீதும், மதங்கள் மீதும் தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்கின்ற கடும்போக்காளர்களான பௌத்த மதத் தேரர்களும், அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ள தீவிர பௌத்தமதவாதிகளும் கொண்டுள்ள இன மத வெறுப்புணர்வுப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த நாடு ஐக்கியப்படுவதற்கும், அனைத்து இனங்களும் ஜனநாயக ரீதியில் இணைந்து அமைதியானதொரு வாழ்க்கை வாழ்வதற்கும் ஒரு போதும் வழி பிறக்கமாட்டாது.
Spread the love