அத்துமீறி விமர்சனங்களை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு பிரச்சினைக்கும், அது நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இருந்தால் கூட அசாதாரணமான கருத்துகள், கேலி-கிண்டல்கள், ஆக்ரோஷமான பதிலடிகள் வெளியாகி வருவதாக கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களுக்கு தணிக்கை இல்லாததால், எவரும் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் உச்ச நீதிமன்றில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்றில், சிக்கலை உருவாக்கியது.
சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர், பெரும்பாலான நீதிபதிகள் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் கூறி இருந்தது விவாதத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் , இப்படி சொல்கிறவர்கள் நீதிமன்றிற்கு சமூகமளித்து, அரசாங்கம் எப்படி கண்டனத்துக்கு ஆளாகிறது என்பதை பார்க்கட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்கள் பற்றிய நீதிபதிகளின் கருத்துக்கு சிரேஸ்ட சட்டத்தரணிகள் சிலர் ஆதரவு அளித்தனர். அத்துடன் “சமூக வலைத்தளங்களுக்கு சில ஒழுங்குமுறைகளை கொண்டுவர வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது” எனவும் கோரியிருந்தனர். இந்த கோரிக்கை நீதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலை சமூக வலைத்தளங்களுக்கு உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.