பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து வரும் போர் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக கூறியுள்ள விமானப்படை தளபதி தனோவா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போரை எதிர்கொள்ளும் பலம் இந்தியாவுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சீனாவின் எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான வலிமை இந்தியாவிடம் இருப்பதாக கூறினார். இருப்பினும் இந்த 2 நாடுகளுக்கும் எதிரான போருக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும், இருமுனை போரை எதிர்கொள்வதற்கு தேவையான திட்டம் இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், எதிர்வரும் 2032ஆம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படை 42 போர் படைக்குழுவை பெறும் என்றும், டொக்லாம் பள்ளத்தாக்கில், சீன படைகள் முற்றிலும் திரும்ப பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசால் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டால், இந்திய விமானப்படையால் பாகிஸ்தானின் அணு ஆயுத மையங்களையும் தாக்க முடியும் என்றும் விமானப்படை தளபதி தனோவா மேலும் தெரிவித்தார்.