தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள உயிரிழப்புக்கள் தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் அடையாளம் காணப்பட்டு நோயாளிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் நேற்று ஒரே நாளில் மாத்திரம் 238 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ளனர். மேலும் அரச மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில், நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், 3ஆவது நாளாக 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாணவர்கள், உடலில் வண்ணங்களை பூசிக்கொண்டு ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
டெங்கு காய்ச்சல் பரவலை தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக 2 ஆயிரம் மஸ்தூர் பணியாளர்கள் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.