தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலங்கள், தற்காலிக பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் துறையூர், பச்சமலை, துறையூர், ஒட்டம்பட்டி- நரசிங்கபுரம் முதலிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. துறையூரில் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பச்சமலை பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் கானப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் ஒட்டம்பட்டி- நரசிங்கபுரம் இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 10வது முறையாக தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டு 30 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கின்றது. அப் பகுதியில் 10 அடி உயரத்திற்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து பாய்கின்றது.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோரிமேடு தரைப்பாலம் மூழ்கியுள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள் நிறைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.