குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை திட்டிவிட்டு தற்போது நாமல்ராஜபக்ச அதன் உதவியை நாடுவதாக இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின கருத்து தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் இந்திய துணைதூதரகத்தின் முன்னாள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பி;ன்னர் அவர் தனது நிலை குறித்து ஐக்கியநாடுகள்மனித உரிமை பேரவையிடம் முறையிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்ன இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தலையீடு செய்வதாக தெரிவித்து வரும் நாமல் ராஜபக்ச அதே அமைப்பிடம் முறையிட்டுள்ளது வேடிக்கையான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைதுசெய்யப்பட்டபோது ஐநாவிடம் முறைப்பாடு செய்யாத நாமல்ராஜபக்ச தற்போதுதான் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஐநாவிடம் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாமல்ராஜபக்ச இந்தியா சீனாவிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய பின்னர் தங்களது ஆர்ப்பாட்டம் எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார் இது அவரது போலி நாடகத்தை வெளி;ப்படுத்தியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.