அவுஸ்திரேலிய கோல்ட்கோஸ்ற்றில் நடைபெறவுள்ள 2018 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு எடுத்துவரப்படும் பிரித்தானிய மகாராணியின் செய்தி அடங்கிய விசேட கோல் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
1930 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது பொதுநலவாய விளையாட்டு போட்டியின் போது பொதுநலவாய நாடுகளின் தலைவி என்ற வகையில் எலிசபத் மகாராணி விடுத்த செய்தியை கொண்ட கோல் விளையாட்டு போட்டி நடைபெறும் காலத்தில் அங்கத்துவ நாடுகளிகளில் காட்சிப்படுத்தப்படுவது சம்பிரதாயமாகும்.
கோலை எடுத்து வந்த விசேட பிரதிநிதிகள் இன்று பிற்பகல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வந்து, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் முன்றலிலிருந்து அலங்கார பேரணியில் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சுசந்திக்கா ஜயசிங்க, ஸ்ரீயானி குலவங்ஸ, தமயந்தி தர்ஷா, டிலந்த மாலகமுவ உள்ளிட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.