Home இலங்கை ஏழ்மையையல்ல, ஏழைகளை ஒழிப்பதே நுண் கடன் நிதி நிறுவனங்களின் நோக்கம்! தீபச்செல்வன்:-

ஏழ்மையையல்ல, ஏழைகளை ஒழிப்பதே நுண் கடன் நிதி நிறுவனங்களின் நோக்கம்! தீபச்செல்வன்:-

by editortamil
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேராவில் கிராம மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ. புவனேஸ்வரனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தமது மகஜரில் கூறியிருந்தார்கள். இதைப்போலவே அண்மையில் வடக்கிற்கு இலங்கையின் மத்திய வங்கி ஆறுஷளுநர் இந்திரஜித் விஜயம் மேற்கொண்டபோதும் இந்த நிறுவனங்களின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பால் அவரிடம்  கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக வடக்கை ஆக்கிரமித்து அழித்து வருகின்றன.
நுண்கடன் திட்டம் உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம் ஆகும். உலகில் போரால், வறட்சியால், பஞ்சத்தால் நொந்துபோன ஏழை எளிய, நலிந்துபோன மக்களை இலக்கு வைத்தே நுண் கடன் நிதி நிறுவனங்கள் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. இத்தகைய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை வைத்து அவர்களை தொடர்ந்து சுறண்ட வேண்டும் என்பதையே நுண்கடன் நிதி நிறுவனங்களின் நோக்கமாகும். உலக முதலாளிகள் வறுமையை ஒரு சந்தையாகவே கருதுகின்றன. இந்த அடிப்படையில் வறுமையை ஒழிப்பதாக கூறிக்கொண்டு வறியவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அவை ஈடுபடுகி்னறன.
இந்தியாவில் வறட்சி, விவசாய வீழ்ச்சி என்பவற்றை பயன்படுத்தி பல நிதி நிறுவனங்கள் அந்த மக்களை கடன் வலையில் வீழ்த்தியுள்ளன. வீடு நிறைய நெல் மூட்டைகளுடன் வாழ்ந்த மக்கள் இன்று கடன் தொல்லையால் வீட்டுக்குள் தூக்கை மாட்டிக் கொண்டு தொங்குகின்றனர். இப்போது, போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களை பனையால் விழுந்தவரை மாடேறி மித்த கதையாய் விழுங்கித் தொலைக்கின்றன நுண்கடன் நிதிநிறுவனங்கள். கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு நகரமெங்கும் போட்டி போட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் குடியேறுகின்றன.
முல்லைத்தீவு தேராவிலை சேர்ந்த சில பெண்கள் அண்மையில்  கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. அதில் ஒரு பெண், “நாற்பதினாயிரம் ரூபா லோன் எடுத்தோம். எனது கணவர் போரில் காயப்பட்டவர்.  இப்போது எனது கணவரால் உழைக்க முடியாது. லோனை கட்டச் சொல்லி நிற்கிறார்கள்.  உழைக்க யாரும் இல்லை. லோன் கட்ட ஏலாமல் மூன்று குழந்தைப் பிள்ளைகளுடன் இருக்கிறம். லோன் கட்டாட்டி போகமாட்டம் என்று பத்துப் பதினொரு மணிவரை நிக்கிறாங்கள்.” என்று குறிப்பிடுகின்றார்.
இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் குறிப்பிடுகையில் “நானும் லோன் எடுத்தனான். எடுத்தால் கட்டத்தான் வேணும். ஆனால் காலை ஏழு மணிக்கே வந்துவிடுவார்கள். தேவையில்லாமல் எல்லாம் பேசுவார்க்ள. உங்கடை மனுசனுக்கு ஏலாதோ? ஏலாது என்றால்  எடுக்காமல் விட்டிருக்கலாம்தானே? இரவில் வருவார்கள். இரவு எட்டு மணி, ஒன்பது மணிக்கு வருவார்கள். பின்னேரம் கூடுதலாக, ஐந்து மணிக்குப் பின்னர் வருவார்கள். ஒருவர் வருவார். இருவர் வருவார். சிலவேளை ஆறுபேர் வருவார்கள்.” என்று குறிப்பிடுவதும் இந்த மக்களின் வாழ்க்கையை நுண்கடன் நிதி நிறுவனங்கள் எவ்வாறு வாட்டி வதைக்கின்றன என்பதை புரிந்துகொள்ள இயலும்.
வன்னி மக்கள், நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்ற சமூகம். அவர்களிடம் நிலத்தை மையப்படுத்திய உழைப்பு அதிகம் உண்டு. விவசாயம், விலங்கு வேளாண்மை போன்றவை ஊடாக தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். 2009இற்கு முன்னைய காலத்தில் ஏற்பட்ட போர் நெருக்கடிகளின் போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதி மக்களை தாங்கிய பெருமை இவர்களுக்கு உண்டு. ஆனால் 2009 இனப்படுகொலை யுத்தம் இந்த மக்களின் நிலத்தோடு சொத்துக்களையும் அழித்துவிட்டது. இதன் காரணமாக மிகவும் வறிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த நிலையை நன்குணர்ந்த நுண்கடன் நிதி நிறுவனங்கள் இலங்கை அரசின் அனுமதியுடன் வடக்கில் நிலை கொண்டன.
போரால் நொந்துபோன மக்களை, போரால் பொருளாதார ரீதியாக நலிந்துபோன மக்களை தேடிச் சென்று கடன்களை இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. கிராமம் கிராமாக தெருத் தெருவாகச் சென்று போட்டி போட்டுக் கொண்டு நுண்கடன்களை வழங்குகின்றனர். அத்துடன் நிலப் பத்திரம், நகைகளை வாங்கிக் கொண்டு அடைவு அடிப்படையில் பணத்தை கொடுத்து மக்களை கடனாளியாக்குகின்றனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். புவனேஸ்வரன் இது பற்றிக் குறிப்பிடுகையில் “மக்கள் ஆரம்பத்தில் அவர்களைத் தேடிச் செல்லவில்லை. அவர்கள்தான் மக்களைத் தேடி வந்து நுண்மையாக  பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சந்தித்து கூடுதலான வட்டிக்கு லோன்களை கொடுத்து மக்களை இன்று பாரிய கடன் சுமையில் வாழத் தள்ளியுள்ளனர்.” என்று கூறுகிறார்.
 
நிதி மக்களின் பொருளாதார வாழ்வுக்கான பொருள். அது உழைப்புக்கும் உற்பத்திக்கும் சமமானதாக இருக்க வேண்டும். நாணயக் குற்றிகளும் பணத்தாள்களும் மக்களின் உழைப்பின் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மாற்றுக் கருவிகளே தவிர, மக்களின் உயிரை எடுக்கும் கொலை ஆயுதங்களல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்த நிதி நிர்வாக நடவடிக்கைகள் மக்களை பாதுகாக்கும் அரணாக விளங்கியது. கடுமையான போரின் மத்தியிலும் பொருளாதாரத் தடையின் மத்தியிலும் கடன்களால் எவரும் தூக்கிட்டு தன்னை மாய்துக் கொள்ளவில்லை. போரின் மத்தியிலும் உரிய கண்ணோட்டத்துடன் பொருளாதாரத்தை முகாமை செய்தல் மற்றும் மாற்று உற்பத்திகளை மேற்கொள்வதின் ஊடாக இந்த நெருக்கடிகளை தவிர்க்கும் விதமாக புலிகள் இயக்க நிதி நிர்வாகம் முகாமித்தது.
புலிகள் காலத்தில் தமிழீழ வைப்பகமும், தமிழீழ நிதித்துறையும் இயங்கியது. தமிழீழ நிதித்துறை இலங்கையின் மத்திய வங்கி ஆற்றும் பணிக்கு மேலான பணியை ஈழத்தில் மேற்கொண்டது. புலிகளின் காலத்தில் ஒரு நுண்கடன் நிதி நிறுவனம்கூட வடக்கு கிழக்கில் இல்லை. அப்போது காணப்பட்ட தமிழீழ அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கள் காணப்பட்டன. கல்விக்கு மாத்திரமின்றி கல்வி வாய்ப்பை இழந்த திறமைசாளிகளுக்கும்  நிறையத் தொழில் வாய்ப்புக்கள் காணப்பட்டன.. எல்லோரும் உழைக்கும், எல்லோரும் தன்னிறைவாய் வாழும் பொருளாதாரத்தை கடும்போரின்போதும் பொருளாதாரத் தடையின்போதும் வடக்கு கிழக்கு கொண்டிருக்க முடிந்தது.
2009 இனப்படுகொலை யுத்தத்தின் பின்னர், யாழ்ப்பாணத்திற்கு பன்னாட்டு நுண்கடன் நிதி நிறுவனங்களும் வர்ண முலாங்களுடன் குடியேறின. அப்போது பலதரப்பட்டவர்களாலும் இதன் ஆபத்து குறித்து எச்சரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் காலத்தில் உள் நுழைய முடியாத இந்த நிறுவனங்கள் போரில் எஞ்சிய மக்களை அழிக்கும் நோக்குடனே குடியேறினவா? வடக்கு கிழக்கு மக்களின் நலிந்த பொருளாதார நிலையை தெரிந்து கொண்டு சில நிதி நிறுவனங்கள் நூற்றுக்கு அறுபது வீதம் வட்டி அறவிடுகின்றன. இத்தகைய ஆபத்தான நுண்கடன் நிதி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கி தமிழர்களை பொருளாதார ரீதியாக அழிக்க முனைகிறதா?
எமது ஊர்களில் நிறைய பணம் வைத்திருப்பவர்கள் சட்ட விரோமான முறையில் அளவற்ற வட்டிக்கு பணத்தைக் கொடுப்பார்கள். கடன் வாங்கியவர்களுக்கு  பெரும்பாலும் கட்ட முடியாத நிலையே ஏற்படும். அதிகளவான வட்டி முதலைக் கட்டிலும் பெருகும். பின்னர் வட்டிக்கு வாட்டி அறவிடுவார்கள். அவர்களை கண்டால் ஓடி ஒளிக்க நேரிடும். சிலர் ஊரை விட்டே ஓடுவார்கள். சிலர் வீடு வாசல் சொத்தை இழப்பார்கள். தமிழகத்தில் இப்படி வட்டிக்கு விடுபவர்களை கந்துவட்டிக்காரர்கள் என்பார்கள். இன்றைக்கு இதன் நவீன  வடிவங்கள்தான் உலக முதலாளிகளின் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள். எங்கள் ஊரில் உள்ள பண முதலாளிகளிடம் கடன் வாங்கினால் இந்த நிலமை என்றால் உலகில் உள்ள பண முதலாளிகளிடம் கடன் வாங்கினால் எந்த நிலமை?
ஏழ்மையை ஒழிப்பதுதான் எங்களின் நோக்கம் என்று பன்னாட்டு நுண்கடன் நிதி நிறுவன முதலாளிகள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் ஒழிப்பது  ஏழ்மையை அல்ல. ஏழைகளையே ஒழிக்கின்றனர். ஏழைகளை ஒழிப்பதே அவர்களின் நோக்கம். ஒரு நாட்டின் நிதி நிர்வாகமும் பொருளாதாரமும் அரசின் வசம் இருக்க வேண்டும். நிதி நிறுவனங்களை அரசு அனுமதிப்பதன் மூலம் பண முதலாளிகளின் ஆட்சிக்கு தனியார் சுறண்டல் மயக் கொடுமைக்கு ஒரு நாட்டின் பிரஜைகள் தள்ளப்படுகின்றனர். மக்கள் வரி கொடுத்து ஆட்சி அமைத்து தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் தனியார் முதலாளிகளிடம் தம் உழைப்பை பொருளாதாரத்தை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு இந்த அணுகுமுறை தள்ளுகின்றது.
இன்று எமது தமிழ் தலைமைகளும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளும் இந்த விடயம் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். புலிகள் காலத்து நிதி நிர்வாக நடவடிக்கையிலிருந்து பொருளாதாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். போரால் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் நுண் கடன் நிதி நிறுவனங்களின் சுறண்டலால் பலியாகுவதை தடுக்க வேண்டும். இந்த விடயத்தில் சாதாரண மக்கள் வழிப்படைய வேண்டும். எமது கல்விச் சமூகமும் இளந் தலைமுறையும் எம் இனத்திற்கான விழிப்பூட்டலை வழங்க வேண்டும். இத்தகைய கூட்டான செயற்பாட்டின் மூலமே உலக பண முதலாளிகளின் பொறிகளை தாண்டி தமது பொருளாதாரத்தை வலிமைப்படுத்திக் கொள்ள இயலும், போரால் நலிந்துபோன எமது மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ள இயலும்.
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More