இலங்கை பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் விடுவிக்க வேணடுமென இந்திய மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஏற்கனவே இரண்டு கட்டப் பேச்சுவர்ர்த்தைகள் இடம்பெற்றதன் தொடர்ச்சியாக இந்திய, இலங்கை அமைச்சர்கள் நிலையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், லங்கை மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்தஅமரவீர மற்றும் இரு நாடுகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர். குறித்த சந்திப்பின் போது இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அண்மை காலங்களில் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவித்த இலங்கை அரசுக்கு இந்தியா சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் ஜலசந்தி பகுதியில் சுருக்குமடி மீன்பிடிப்பை தடை செய்வது தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நட வடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள இரு நாடுகளிடையே ஹொட்லைன் தொலைபேசி வசதியை ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய, இலங்கை அமைச்சர்கள் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.