வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ அல்லது பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அலட்டிக் கொள்ளாது என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக வேண்டும் என்ற கொள்கையில் இருந்து தமது கட்சி ஒருபோதும் விலக மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கட்சி; ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் எனவும் சில உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தமது கட்சி விளங்கும் எனவும் அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு தாங்கள் உடந்தையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த அவர் ஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்க வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்தார்