பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் மாகாண சபைகளினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகளையும் நாளாந்த நடவடிக்கைகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
தற்போது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்பாடுகளை வேறு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாமென்றும் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயனுள்ள விதத்தில் செலவுசெய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.