குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பகுதியில் மாமியாரை வெட்டி படுகொலை செய்ததுடன் , மனைவியை வெட்டி காயப்படுத்திய குற்றத்திற்காக குடும்பத்தலைவருக்கு 8ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 05ஆம் திகதி யோகராசா சிவகலா (வயது 42) எனும் பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். அவரது மகள் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் உயிர் தப்பினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகனும் , காயங்களுக்கு இலக்கான பெண்ணின் கணவருமான கணேசஐயா காந்தரூபன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.
குறித்த தீர்ப்பில் எதிரி மீது சுமத்தபட்ட குற்ற சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது.அதனால் எதிரியை நீதிமன்றம் குற்றவாளியாக காண்கிறது. பெண்ணை வெட்டி படுகொலை செய்ய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் , மற்றுமொரு பெண்ணை வெட்டி காயப்படுத்திய குற்றசாட்டுக்கு ஓர் ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது. இரண்டு தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். அத்துடன் இரண்டு குற்றங்களுக்கும் , தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்த வேண்டும். அதனை செலுத்த தவறின் இரண்டு மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். என நீதிபதி தீர்ப்பளித்தார்.