நெல்லையில் கந்துவட்டி பிரச்சினையில் மூன்று பேர் தீக்குளித்து இறந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து டிஜிபி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் கந்து வட்டி பிரச்சினை காரணமாக தீக்குளித்தனர். இதில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழக்க கணவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கந்துவட்டி பிரச்சனையில் நிகழ்ந்த இந்த கொடூர மரணம் இந்தியா முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பிரச்சினையில் போலீஸார் மீதும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் பத்திரிகை செய்தி அடிப்படையில் தானாக முன்வந்து வழக்கை கையிலெடுத்துள்ளது.
மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி மீனா குமாரி உத்தரவின் பேரில் இந்த விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில காவல்துறை டிஜிபி ஆகியோரை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.