குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடக்கின் உள்ளுராட்சி மன்றங்களின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும் கோரியுள்ளார்.
அரசாங்கம் நுவரெலியாவில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கையை தேவானந்தா முன்வைத்துள்ளார். மருதங்கேணி, கண்டாவாளை, ஒட்டுசுட்டான் மற்றும் மடு ஆகிய மாவட்டச் செயலகப் பிரிவுகளில் பிரதேச சபைகள் உருவாக்கப்படாத காரணத்தினால் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, மானிப்பாய், முல்லைத்தீவு, சுன்னாகம், நெல்லியடி, சங்கானை போன்ற நகரங்களுக்கு நகர சபை அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.