இந்தியா முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 1,520 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 15ஆம் திகதி வரை 12,945 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெங்குவால் கேரளாவில் 19ஆயிரத்து 053 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 35 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் 14ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 13ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.