டெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் நேற்று புகையிரதம் மூலம் சென்னை வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் கோட்டைக்கு சென்று கோரிக்கை மனுவை வழங்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், நதிகளை இணைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் 100 நாட்களை எட்டிய நிலையிலும், விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர்.
அத்துடன் மனு கொடுப்பதற்காக, புகையிரத நிலையத்தில் இருந்து கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல விவசாயிகள் தயாராகிய போதும் காவல்துறையினர் அவர்களை தடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயி பிரதிநிதிகள் 10 பேர் மட்டும் கோட்டைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்கள் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினர்.