கித்துள் மரம் தவிர்ந்த பனை மற்றும் தென்னை மரம் உள்ளிட்ட ஏனைய மரங்களில் இருந்து கள் சீவவோ, இறக்கவோ முடியாது என புதிய மதுவரி திருத்த சட்டத்தில் அறிவித்துள்ளது. அது தொடர்பிலான அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறித்த தடை சட்டம் அமுலுக்கு வந்தால் வடக்கில் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ள 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் வலிகாமம் கொத்தணியின் தலைவர் எஸ் செல்வராசா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சட்டம் நடைமுறைக்கு வரும் அதனால் வடக்கு கிழக்கு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவார்கள்.
கித்துள் மரம் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மாத்திரமே உள்ளன வடக்கு கிழக்கில் பனை தென்னை மரங்களே உள்ளன. அந்நிலையில் பனை தென்னை மரங்களில் கள் சீவுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் , அது முற்றாக தமிழ் மக்களையே பாதிக்கும் எனவே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து குறித்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றில் குரல் எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை அரசின் இந்த நடவடிக்கை இனவாத நடவடிக்கை எனவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றது.