இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஒன்பது தொன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 18 வகையான மலர்களை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார் ஆகியோர் கல்யாண உற்சவ மண்டபத்தில் வைக்கப்பட்டு 20 முறை இப் பூசை இடம்பெற்றது.
15ம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்த புஷ்பயாகம் இடையில் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் மீளவும் நடத்தப்பட்டு வருகின்றது.தெலுங்கு வருடத்தில் வரும் கார்த்திகை மாத ஸ்ராவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
இதன் பிரகாரம் ஆலய கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பல வண்ண மலர்கள் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 தொன் மலர்கள், கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 தொன் மலர்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 தொன் மலர்கள் என மொத்தமாக 9 தொன் மலர்களை கொண்டு புஷ்பயாகம் இடம்பெற்றது.
பக்தர்களின் நெஞ்சங்களை கவரும் இந்த புஷ்ப யாகத்தில் பெருந்திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானின் திருவருளைப் பெற்றனர்.