மாநிலத்தின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளைநிலங்களில், ஓ.என்.ஜி.சி பதித்துள்ள எண்ணெய்க் குழாய்களால், விளைநிலங்கள் தற்போது கடுமையான சேதத்தை சந்தித்து வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கதிராமங்கலம் பகுதிகளில் மேலும் எண்ணெய்க் குழாய்களை பதிக்க ஓஎன்ஜிசி ஆயத்தமான நிலையில் கடந்த ஜூன்,ஜூலை மாதங்களில் மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதன் காரணமாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் வெளிவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கஜழமை பேராசிரியர் ஜெயராமன் எழுதிய நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது விழாவில் பங்கேற்று அவர் உரையும் நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக பேராசிரியர் ஜெயராமன் பேசியதாக மயிலாடுதுறை காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த வழக்கில் பேராசிரியர் ஜெயராமன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(1)(டி) என்ற பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை தன்மீதான வழக்கை சட்டரீதியில் சந்திக்கப் போவதாக கூறியுள்ள ஜெயராமன் அந்த நிகழ்ச்சியில் தான் இந்திய ஒற்றுமைக்கு எதிராக எதுவும் பேசவில்லை எனவும் இன்றைய காலகட்டத்தில் நீர் நிலைகளை மக்கள், இளைஞர்கள் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றே பேசியதாகவும் ; தெரிவித்துள்ளார்.