குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி ,முல்லைதீவு ,வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிளின் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு இன்று கிளிநொச்சி கனகபுரம் வீதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு அருகாமையில் வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகம் என்ற மனிதாபிமான தொண்டர் நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது
இன்று காலை பத்து மணியளவில் தென்னக்கோன் சாரத்தின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி றோயல் முன்பள்ளி முதல்வர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்திற்கான பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்துவைத்தார். அத்துடன் சிறப்பு விருந்தினராக கனகபுரம் கிராம அலுவலர் மற்றும் குருக்கள், பாதிரியார் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிச் செய்தியினையும் வழங்கினர்
வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகமானது எமது புலம்பெயர் மற்றும் தாயக உறவுகளினால் வழங்கப்படுகின்ற நன்கொடைகளை வைத்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மீண்டேள முடியாமல் தவிக்கின்ற மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து உதவுவதே இதன் நோக்கம் எனத் இதன் இணைப்பாளர் தென்னக்கோன் சாரத் தெரிவித்தார்.
தமது அமைப்புக்கு உதவிகளை வழங்க வேண்டும் என எண்ணுபவர்கள் தமது கனகபுரத்தில் உள்ள அலுவகலத்தில் தொடர்புக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்
அத்துடன் இவ் வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் இணைப்பாளராக இருப்பவர் தென்னக்கோன் சரத் இவரும் இரண்டு கண்பார்வையையும் இழந்தது மட்டுமல்லாது ஒரு கையினையும் இழந்த ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது