அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளமையால் தமிழர் விடுதலைக் கூட்டணி நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு தேர்தல் சம்பந்தமாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கௌரவ.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி, கௌரவ ஜி.ஜி.பொன்னம்பலம் கியூ.சி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி மக்களிடம் ஆதரவை கோரக்கூடிய சகல தகுதிகளும் கொண்ட சில கட்சிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன்று. எதிர்வரும் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சகல மன்றங்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களை நியமிக்கும் என கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தேர்தலில் எம்முடன் இணைந்து போட்டியிட பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. துரதிஷ்டவசமாக அனைவருக்கும் தெரிந்த காரணத்தினால் எந்த கட்சியுடனோ இணைந்து போட்டியிடுவது என்ற முடிவை உடனடியாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் ஒரு கட்சி இணைவதை இன்னொரு கட்சி விரும்புவதாகத் தெரியவில்லை. ஆகவே தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் நடைபெற இருக்கின்ற சகல மன்றங்களின் வட்டாரங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஆனால் எம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகளை இணைப்பது பற்றி நாம் பரிசீலிப்போம்.
பல்வேறு தமிழ் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள், வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவ தலைவர்கள் மற்றும் ஏனையவை இணைந்து ஒரு பொது அமைப்பின் கீழ், பொதுக்கொள்கையுடன் உதயசூரியன் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட 2004ம் ஆண்டு இருந்த நிலைமைக்கு தமிழ் மக்களை அழைத்துச் செல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி விரும்புகிறது. இந்த நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள், தராக்கி போன்றோர் முற்றுமுழுதாக ஆதரித்தனர். பொது அமைப்பை பொறுத்தவரையில் அவர்களின் கருத்து வடக்கு கிழக்கில் உள்ள சகல தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் குழுக்களும் தங்களுக்கிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளை மறந்து, நீண்டகாலம் இராணுவத்துடன் தொடர்புகளை கொண்டிருந்ததையும், உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாது, ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதே. இதற்கு நாம் சம்மதம்.
ஆயுதக்குழுக்களை பொறுத்தவரையில் அவர்களின் கருத்து யாதெனில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்எ.ப் ஆகியவற்றை இணைத்துக்கொள்வதில் விடுதலைப்புலிகளுக்கு ஆட்சேபனை இல்லையென்றும், விரைவில் அவ்விரு குழுக்களையும் இணைத்துக்கொள்ளவும்;, அத்துடன் புளொட் இயக்கத்தையும் இணைத்துக்கொள்வதற்கும் ஆர்வம் காட்டினார்கள். இந்த காலம் எப்போதெனில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய மூன்று இயக்கங்களும் உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவத்தில் இணைந்து செயற்பட்டவர்கள் என்பது மட்டுமல்ல இராணுவத்தின் உளவு துறையினருடனும் வடக்கு கிழக்கில் நடைபெற்ற இராணுவத்துடனான கூட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த காலம் ஆகும்.
நாம் தனிப்பட்ட எவரையோ அல்லது அமைப்பையோ சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவர்களுடைய கடந்த காலத்தை சுட்டிக்காட்ட விரும்பவில்லை. எமது கவலை யாதெனில் சில சுயநலமிகளால் 2004ம் ஆண்டு எம்மை தேடிவந்த ஓர் பொன்னான வாய்ப்பை இழந்து விட்டோம் என்பதே. இப்போது எமது உணர்வெல்லாம் 2004ம் ஆண்டு இருந்த நிலைமைக்கு மீளச்சென்று சாத்வீக போராட்டத்தை முன்னெடுப்பதே எமக்கு இப்போது கிடைத்திருக்கின்ற நல்லதொரு வாய்ப்பாகும்.
எங்கெங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றார்களோ அவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் ஒவ்வொருவரையும், தனிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அமைப்புக்களாக இருந்தாலும் சரி இணைந்து உருவாக்கவிருக்கும் பொது கொள்கையின் கீழ் இணைந்து செயற்பட முன்வருமாறு மிக விசுவாசமாக அழைக்கிறோம்.
நான் மிக பணிவுடன் வேண்டிக்கொள்வது எம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒவ்வொருவரும் என்னுடன் தொடர்பு கொண்டு ஒரு பொதுத் திட்டத்தை உருவாக்க ஒன்றிணையும்படி கேட்டுக்கொள்கிறேன்.