அரசியல் மிகப்பெரிய பணி எனவும் அதற்கான ஆயத்தப்பணிகளை ஆரம்பித்து அத்திவாரம் இடப்பட்டு விட்டதாகவும் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். அவரது பிறந்தநாளான இன்று நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்த கமல் ஹாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரவேசத்தின் அத்திவாரம் பலமாக இருக்க வேண்டியுள்ளது எனவும் மக்களின் வெற்றிக்காக இதை செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு பின்னும் இந்த பணிகள் நடைபெற வேண்டும் என்பதால் அறிஞர்களுடன் ஆய்வு செய்து வருகிறேன் எனத் தெரிவித்த அவர் கர்ப்பமாக இருப்பேன் என்று சொன்னதும் பிள்ளைக்கு பெயர் என்ன என்று கேட்காதீர்கள். குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்துவிட்டு பெயர் சூட்டலாம் எனத் தெரிவித்துள்ளார்.
நாம் என்ன செய்தாலும் அனைவரிடம் இருந்தும் விமர்சனம் வரவேண்டும் எனத் தெரிவித்த கமல் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசவும், தான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவும் #theditheerpomvaa, #maiamwhistle, #vituouscycle 3 அப்களை அறிமுகப்படுத்தினார். ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த ‘அப்’ அவர்களுக்கு கடமையை நினைவூட்டும் எனவும் மக்களுக்கும், அரசுக்கும் நடுவே உரையாடல் தொடரவும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தவறு செய்வோரை சினிமாவில் தான் செய்ததை விட மோசமாக செய்துவிடுவேன் எனவும் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார். எந்த மதமானாலும் வன்முறை கூடவே கூடாது. இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது தன் நோக்கமல்ல எனத் தெரிவித்த கமல் சமூகம் பார்த்து தான் எப்போதும் நட்பு கொண்டது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.