குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க பதவி விலகியுள்ளார். 49 வயதான இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரான ஹதுருசிங்க, கடந்த 2014ம் ஆண்டு முதல் பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பங்களாதேஸ் அணி இந்தக் காலப் பகுதியில் டெஸ்ட் வெற்றிகளை ஈட்டி சாதனை படைத்திருந்தது.
எவ்வாறெனினும், பங்களாதேஸ் அணி இறுதியாக பங்குபற்றிய தென்ஆபிரிக்காவிற்கான போட்டித் தொடரில் படு தோல்வியைத் தழுவியிருந்தது. ஒரு போட்டியிலேனும் தென்ஆபிரிக்க கிரிக்கட் தொடரின் போது பங்களாதேஸ் அணி வெற்றியை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளராக பதவி வகிக்க தொடர்ந்தும் விரும்பவில்லை என ஹதுருசிங்க கூறியிருப்பதாகவும், பதவி விலகுவதற்கான முக்கிய காரணங்கள் எதனையும் கூறவில்லை எனவும் அந்நாட்டு கிரிக்கட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சந்திக்க ஹதுருசிங்க இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி அண்மை காலமாக பல்வேறு தோல்விகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஹதுருசிங்கவிடம் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.