குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லெபனான் பிரதமர் சாட் ஹரீரி (Saad Hariri) யின் பதவிவிலகல் சட்டவிரோதமானது என அந்நாட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் வைத்து பிரதமர் ஹரீரி மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹரீரி தற்பொழுது சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் குழப்பங்களை விளைவிக்கும் நோக்கில் சவூதி இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஹரீரி நாடு திரும்புவதற்கு சவூதி அதிகாரிகள் தடை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரதமர் ஹரீரியின் பதவி விலகலானது அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். சாட் ஹரீரி தங்களது அரசியல் எதிராளி என்ற போதிலும் அவரே லெபனானின் பிரதமர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.