ஜிம்பாப்வேயின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. அத்துடன் 1980 முதல் அந்நாட்டு ஜனாதிபதியாக இருந்த ரொபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரச தொலைக்காட்சி சேவையைக் கைப்பற்றிய பின்னர் ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேயின் அரச தொலைக்காட்சி நிறுவனம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் – ராணுவபுரட்சியா?
Nov 15, 2017 @ 03:58
ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹரரே நகரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளதுடன் அரச தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தையும் கைப்பற்றியுள்ளனர். அரசு ஊடக தலைமையகத்தை ராணுவம் சிறைப்பிடித்துள்ளதால் ராணுவ புரட்சிக்கு அடித்தளமா என கேள்வி எழுந்துள்ளது.
ஜிம்பாப்வேயில் 93 வயதான ரொபர்ட் முகபே ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற நிலையில், இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாகவும் அதிகளவிலான ராணுவ வீரர்கள் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை அரசை கைப்பற்றும் நோக்கமில்லை என தெரிவித்துள்ள ராணுவ செய்தி தொடர்பாளர் குற்றவாளிகளை மட்டுமே ராணுவம் குறிவைத்துள்ளது எனவும், ஜனாதிபதி முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.