குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தடுக்கப்பட்டிருந்தால் வற் வரி விதிக்கப்பட வேண்டியிருக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஒரு வருட காலத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸின் நிறுவனம், பிணை முறிகளை கொள்வனவு செய்ய 66 பில்லியன் அரச நிதியை மத்திய வங்கி ஊடாக பயன்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வித பிணையையும் பெற்றுக்கொள்ளாது இவ்வாறு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் அரசாங்கப் பணத்தில் முறிகளை கொள்வனவு செய்து அந்த பிணை முறிகளை மீளவும் அரசாங்கத்திற்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபமீட்டப்பட்டுள்ளதாகவும் இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தாம் தனிப்பட்ட ரீதியில் நம்புவதாகவும் ஊழல் மோசடிகள் இடம்பெறாமல் இருந்திருந்தால் வற் வரி மட்டுமன்றி வேறும் வரிகளைக் கூட விதித்திருக்க வேண்டியிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.