குளோபல் தமிழ் செய்தியாளர்
அரசியல் ரீதியாக முரண்பட்டிருந்த நிலையில், மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியை அவரது மகனான மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி நேற்று மாலை சந்தித்து பேசினார். கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை வியாழக்கிழமை மாலை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
கோபாலபுரம் இல்லம் வந்த போதெல்லாம் தாயார் தயாளு அம்மாவை மட்டும் சந்தித்து சென்ற அழகிரி, நீண்ட நாட்களுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்த்தில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது அழகிரி மகன் துரை தயாநிதியும் உடனிருந்தார். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.
தொலைபேசி வழியாகக் கூட தொடர்பு கொள்ள மறுத்த அழகிரி இப்போதாவது நேரில் வந்து சந்தித்தாரே என்று கருணாநிதி நெகிழ்ச்சியடைந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் தம்மை மகன் மு.க. அழகிரி நேரில் சந்தித்து பேசியதில் திமுக தலைவர் கருணாநிதி மகிழச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டு 2 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இதன் பின்னர் திமுக தொடர்பான விவகாரங்களில் அழகிரி தலையிடாது விலகியிருந்தார். ஆனால் அழகிரியின் மகன் தயா அழகிரி அவ்வப்போது திமுகவினரை சமூக வலைதளங்களில் சாடி வந்தார்.