ஆயுள் தண்டனையையும் தாண்டி சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்திருந்தார்.
நல்லெண்ண அடிப்படையில் தம்மை விடுவிக்குமாறு நளினி கோரியிருந்த நிலையில் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. 1991இல் இடம்பெற்ற முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தன்னை தமிழக அரசின் 1994ஆம் ஆண்டு அரசாணைப்படி விடுதலை செய்ய வேண்டும் என அவர், மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் பதில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.