குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் அளவுக்கு அதிகரித்துள்ள வாள் வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துமாறும் , அதன் சூத்திர தாரிகளை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அவசர பணிப்புரை பிறப்பித்துள்ளார்.
யாழில். கடந்த சில தினங்களில் அதிகரித்துள்ள வாள் வெட்டு சம்பவங்களை அடுத்து இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்.மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவுக்கு அமைய விசேட கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
குறித்த கூட்டத்தில் , அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் , வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பாலித்த பெனார்ன்டோ, யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொசான் பெனார்ன்டோ, சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் செனவிரட்ண, காவல்துறை அத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ். தலைமை காவல் நிலைய தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஹெமாவிதாரன ஆகியோர் கலந்துகொண்டிருந்ததனர்.
யாழில். அண்மைக்காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் சட்டம் ஒழுங்கிற்கு சவால்விடுகின்ற செயற்பாடகவே காணப்படுகின்றது. இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
எனவே சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி இத்தகைய சமூக விரோத, சமூகத்தவர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபடுவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு அவசர பணிப்புரையை பிறப்பித்திருந்தார்.
அதேவேளை யாழ்.மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன் கிழமை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின் போது , அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந், தற்போது யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் குழுமோதல்கள் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தும், அம் மக்கள் அச்சத்திலும் பொழுதை கழித்து வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் இக் கைக்குண்டு வைத்திருந்த மற்றும் வாள்வெட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு பிணை வழங்குவது சமூகத்தின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாகிவிடும் என குறிப்பிட்டு அப் பிணை மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி அப் பிணை மனுவை நிராகரித்து அதனை ஒத்திவைத்ததுடன் வாள்வெட்டு கலாச்சாரத்தை உடன் கட்டுபடுத்துமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்வாறான சூழ்நிலையிலேயே இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிபதியின் உத்தரவுக்கமைய மேற்படி விஷேட கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இவ் விஷேட கூட்டமானது காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.