ஜனாதிபதியுடனான சந்திப்பின் முடிவுகளில் திருப்தியில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்படோர் தொடர்பில், ஜனாதிபதியுடனான சந்திப்பின் முடிவுகளில் திருப்தியில்லை எனவும் இவ்விவகாரத்துக்கு, சர்வதேச விசாரணையே அவசியம் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர் . காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்றையதினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர்
கடந்த மாதம் கிளிநொச்சிக்கு சென்றிருந்த ஜனாதிபதியிடம், தனியாகச் சந்திப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமைக்கு அமைய மேற்படி சந்திப்பு இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர் : 16.11.17
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுக்கும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை இதன்போது அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் விரிவாக முன்வைத்தனர்.
நாட்டின் அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் போதிய புரிந்துணர்வினைத் தான் கொண்டிருப்பதாக இதன்போது குறிப்பிட்ட ஜனாதிபதி ;, வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சிறைக்கூடங்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , அத்தகைய இரகசிய தடுப்புமுகாம்கள் எதுவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்படவில்லை என்றும் அவ்வாறு எவரும் இரகசியமாகத் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
காணாமல் போனோரின் உறவினர்களின் முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கான புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றினை மாவட்ட செயலாளரின் ஊடாக வழங்குவதற்கும் இதன் போது ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி ;, எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றுநிருபம் ஒன்றினை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
சேகரிக்கப்படும் தகவல்களை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் பற்றிய ஆணைக்குழுவின் ஊடாக மீண்டும் விசாரணை செய்யவும் அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.